குலதெய்வ வழிபாட்டால் முதல்வர் ஜெ.,கண்விழித்து விட்டார்:திவாகரன் தகவல்

October 8, 2016 4:49 am
குலதெய்வ வழிபாட்டால் முதல்வர் ஜெ.,கண்விழித்து விட்டார்:திவாகரன் தகவல்

சென்னை:ஜெயலலிதா கண் விழித்து விட்டதாகவும், அவர் விரைவில் வீடு திரும்ப தொடர்ந்து பூஜைகள் செய்ய வேண்டும் என்று சசிகலாவின் தம்பி திவாகரன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் பதினாறு நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்து வருகிறார். தற்போது மருத்துவமனையில் இருந்து வெளியிடப்படும் அறிக்கையில் அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் இருப்பதாக குறிப்பிடுகிறது. ஆனால், அதேநேரம் செயற்கை சுவாசக்கருவியின் உதவியுடன் சுவாசிக்கும் அவர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருப்பதாலும் இப்போதைக்கு ஆட்சி, நிர்வாக அலுவல்களில் ஈடுபடுவது இயலாத காரியம் என்பதுதான் அவரது நிலை.

முதல்வர் விரைவில் பூரண குணமடைய வேண்டி அதிமுகவினர் பல்வேறு பிரார்த்தனைகள் செய்து வரும் நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருவெண்ணியூர் அய்யனார் கோவிலை சசிகலாவின் சகோதரர் திவாகரன் சிறப்பு யாகம் ஒன்றினை நடத்தியிருக்கிறார். ஜெயலலிதாவுக்காக அந்த யாகத்தை விடியற்காலையில் தொடங்கி நான்கு மணி நேரத்துக்கு மேலாக நடத்தியிருக்கிறார் திவாகரன்.

இதை தொடர்ந்து திருவெண்ணியூர் அய்யனார் கோயிலில் இருந்து சற்று தூரத்தில் உள்ளது வெண்ணிக் கரும்பர் கோயில். இதை கரும்பீஸ்வரர் கோயில் என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள். இந்த கரும்பீஸ்வரருக்குச் சிறப்பு பூஜைகள் செய்து வணங்கினால் சர்க்கரை நோயின் பாதிப்பு குறையும் என்பது ஐதீகம். இந்தக் கோயிலிலும் ஜெயலலிதாவுக்குச் சர்க்கரை நோயின் பாதிப்பு குறைய வேண்டும் என சிறப்பு பூஜைகளை நடத்தியிருக்கிறார் திவாகரன்.

                

நேற்று காலை மீண்டும் கரும்பீஸ்வரர் கோயிலுக்குப் போன திவாகரன், நம்ம வேண்டுதல் வீண் போகலை… அம்மா கண் முழிச்சுட்டாங்க… கரும்பீஸ்வரனுக்கு தொடர்ந்து பூஜை செய்யணும்…’ என்று சொன்னதாக மன்னார்குடி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து கரும்பீஸ்வரர் கோயிலில் ஜெயலலிதாவுக்காக பூஜைகள் நடக்கிறது. திவாகரனுக்கு ஒரு தகவல் வருதுன்னா, அது உறுதியாகத்தான் இருக்கும். அம்மா நல்லா இருக்காங்கன்னு சசிகலா குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் முதல் தகவல் இதுதான். அப்படின்னா அம்மா நல்லா இருப்பாங்க என்று உற்சாகமடைந்துள்ளனர் அதிமுகவினர்.

               

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என அதிமுகவினர் தமிழகம் முழுக்க கோயில் கோயிலாக பிரார்த்தனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

குழுசேர்

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares