தலையில்லா ஊழல் தடுப்புப் பிரிவும், தலைவிரித்தாடும் ஊழல்களும்! டாக்டர் ராமதாஸ் வேதனை

January 12, 2017 4:05 am
தலையில்லா ஊழல் தடுப்புப் பிரிவும், தலைவிரித்தாடும் ஊழல்களும்! டாக்டர் ராமதாஸ் வேதனை

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெருந்தடையாக இருப்பது ஊழல்கள் தான். ஊழலை ஒழித்தால் தான் ஒரு நாடோ, மாநிலமோ முன்னேற முடியும் எனும் போது ஊழல் ஒழிப்புக்குத் தான் ஆட்சியாளர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ ஊழலை ஒழிப்பதற்கு பதிலாக ஊழலை மறைக்கும் நோக்குடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தை செயலிழக்க வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் கடந்த 1964-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. நேர்மையான காவல்துறை அதிகாரிகள் தலைமையில் வலிமையான அமைப்பாக இது திகழ்ந்த வரை தமிழகத்தில் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அண்ணா காலத்திற்கு பிந்தைய திராவிடக் கட்சிகளின் காலத்தில், பெரும்பான்மையான தருணங்களில் பொம்மை அதிகாரிகளை இந்த அமைப்பின் இயக்குனர்களாக நியமித்ததால் அரசு நிர்வாகத்தில் ஊழல்களை கட்டுப்படுத்துவது என்பது குதிரைக் கொம்பாக மாறியது. 2011-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தை முடக்குவதற்கான முயற்சிகள் தொடங்கின. திறமையான அதிகாரிகள் அங்கிருந்து விரட்டப்பட்டனர்.

2011-ஆம் ஆண்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்ட காவல்துறை கூடுதல் இயக்குனர் மகேந்திரன் ஆட்சியாளர்களுக்கு வளைந்து கொடுக்காததால், அடுத்த 15 மாதங்களுக்குள் அங்கிருந்து மாற்றப்பட்டார். அதன்பின் 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த பிரிவின் புதிய இயக்குனராக டோக்ரா என்ற அதிகாரி நியமிக்கப்பட்டார். அவரும் சுமார் 15 மாத பணிக்காலத்திற்குப் பிறகு 2013ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அதன்பின் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புதிய இயக்குனர் நியமிக்கப்படவில்லை. அதேபோல், இப்பிரிவில் காவல்துறை தலைவர் (ஐ.ஜி) நிலையில் மூவர் பணியமர்த்தப் பட வேண்டும். ஆனால், ஒருவர் மட்டுமே பணியில் உள்ள நிலையில் 2 இடங்கள் காலியாக உள்ளன.

அதுமட்டுமின்றி, காவலர்கள் நிலையிலிருந்து காவல்துறை துணைத் தலைவர் (டி.ஐ.ஜி) வரையிலான பணிகளில் 40% இடங்கள் காலியாக உள்ளன. இதனால் இந்த அமைப்பின் செயல்பாடுகள் முடங்கி விட்டன. இப்பிரிவின் செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரங்களே அதை நிரூபிக்கின்றன. கடந்த 2013-14 ஆம் ஆண்டில் கையூட்டு வாங்கியதாக கையும் களவுமாக 206 அதிகாரிகள் பிடிபட்டனர்.

ஆனால், 2015-16ஆம் ஆண்டில் இது மூன்றில் ஒன்றாக அதாவது 82 ஆக குறைந்து விட்டது. அதேபோல், நிர்வாகத் தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எண்ணிக்கை 2400 ஆகவும், துறை சார்ந்த விசாரணை முடியாமல் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 960 ஆகவும் அதிகரித்து விட்டது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் செயல்பாடுகள் முடங்கி விட்டதால் அரசு நிர்வாகங்களில் ஊழல் பெருகி விட்டது. ஊழல் தடுப்புப் பிரிவு முழு அளவில் செயல்பட்டபோது, ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட்டார்களோ இல்லையோ, அந்த அமைப்பின் மீது ஊழல் அதிகாரிகளுக்கு அச்சம் இருந்தது. ஊழல் வாங்கி சிக்கினால் பணிக்காலம் முழுவதும் பாழாகிவிடும் என்று அஞ்சினர்.

ஆனால், இப்போது வெளிப்படையாக லஞ்சம் வாங்கினால் கூட அதை கேள்வி கேட்கும் அளவுக்கு எந்த அமைப்பும் வலிமையாக இல்லை என்பதால் ஊழல் தடையின்றி பெருகுகிறது. மிக முக்கியமான ஊழல் தடுப்புப் பிரிவின் இயக்குனர் பதவி கடந்த மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவுமில்லை. இப்பதவிக்கு தகுதியான அதிகாரிகள் இல்லை என்று கூற முடியாது. காவல்துறை தலைமை இயக்குனர் (டி.ஜி.பி) அல்லது கூடுதல் தலைமை இயக்குனர்(ஏ.டி.ஜி.பி) நிலையில் உள்ள அதிகாரியைத் தான் இப்பதவியில் அமர்த்த முடியும். தமிழகத்தில் டி.ஜி.பி நிலையில் மொத்தம் 6 பதவிகள் உள்ளன.

இப்பதவியில் உள்ள அதிகாரிகளில் பலர் முக்கியம் இல்லாத பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவரை இப்பதவியில் தாராளமாக அமர்த்தலாம்.

ஒருவேளை டி.ஜி.பி. நிலை அதிகாரிகள் இல்லாவிட்டால் கூடுதல் டி.ஜி.பி நிலை அதிகாரிகளை இப்பதவிக்கு நியமிக்கலாம். தமிழகத்தில் கூடுதல் டி.ஜி.பி நிலையில் 24 அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் இல்லாத பதவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. காவல்துறை தலைவராக இருந்து கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனராக கடந்த திசம்பர் 31-ஆம் தேதி பதவி உயர்வு வழங்கப்பட்ட நான்கு அதிகாரிகளும் முக்கியத்துவம் இல்லாத பதவிகளில் தான் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். தகுதியான அதிகாரிகள் 30 பேர் இருந்தும் அவர்களில் ஒருவரை ஊழல் தடுப்பு பிரிவின் தலைவராக நியமிக்க அதிமுக அரசு மறுப்பதற்குக் காரணம் அந்த அமைப்பு ஊழலை கண்டுகொள்ளாத அமைப்பாகவே நீடிக்க வேண்டும் என்பது தான்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 8 மாதங்களாகியும் லோக் அயுக்தா சட்டத்தை நிறைவேற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதிலிருந்தே ஊழலை தடுப்பதல்ல… வளர்ப்பது தான் ஆட்சியாளர்களின் நோக்கம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெருந்தடையாக இருப்பது ஊழல் என்பதால் அதை ஒழிப்பதில் தயக்கம் காட்டக் கூடாது. மாறாக, ஊழல் தடுப்புப் பிரிவின் இயக்குனர் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும். அத்துடன் ஊழலை ஒழிப்பதற்கான லோக் அயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கான சட்டத்தையும் சட்டப்பேரவையில் உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media