வறட்சி நிலை குறித்து விவசாயிகள் யாரும் எந்த வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் !

வறட்சி நிலை குறித்து விவசாயிகள் யாரும் எந்த வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் !

பருவ மழை பொய்த்ததால் தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது.

தமிழகம் : 9, 10-ந் தேதிகளில் உயர்மட்ட குழு நேரில் ஆய்வு செய்யும்; தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை; முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

விவசாயிகளின் பயிர்கள் கருகியதால் பல இடங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 60–க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

இது குறித்து முதல்–அமைச்சர் அறிக்கையில் அறிவித்தது , விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர், இந்த நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயர்மட்ட குழு நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த பிறகு நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும்

இயற்கை இன்னல்களான வெள்ளம், புயல், வறட்சி ஆகியவற்றிலிருந்து மக்களைக் காப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அதன்படி, சமீபத்திய ‘வார்தா’ புயல் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், சீரமைப்பு பணிகள் விரைந்து செயல்படுத்தப்பட்டன.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ,இயற்கை இன்னல்களின்போது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு தேவையான நிவாரணங்களை உரிய நேரத்தில் அளிப்பதிலும் அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு விடுவிக்காத நிலையில், தமிழ்நாடு அரசு தொடர் மனுக்களை தாக்கல் செய்ததன் அடிப்படையில், உச்சநீதிமன்ற உத்தரவுகளின் காரணமாக 30.10 டி.எம்.சி. தண்ணீருடன் மொத்தமாக 66.60 டி.எம்.சி. தண்ணீரை நாம் பெற முடிந்தது.

குறுவை சாகுபடி திட்டம்ஆனாலும், போதிய நீர் கிடைக்கப்பெறாததாலும், தென்மேற்கு பருவமழையின் மூலம் போதிய மழைநீர் கிடைக்கப்பெறாததாலும், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக 54 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான குறுவை சாகுபடி திட்டத்தை மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து அது செயல்படுத்தப்பட்டது.

அதே போன்று, சம்பா பருவத்திலும், கர்நாடகத்திலிருந்து போதிய தண்ணீர் கிடைக்கப்பெறாததாலும், வடகிழக்கு பருவமழை பொய்த்ததாலும், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக 64 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிலான சம்பா சாகுபடிக்கான தொகுப்பு திட்டம் 18.8.2016 அன்று ஜெயலலிதா அறிவித்தபடி செயல்படுத்தப்பட்டுள்ளது.

மழை குறைவு காரணமாக தமிழ்நாட்டில் அக்டோபர் 1–ந் தேதி முதல் டிசம்பர் 31–ந் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த பருவமழை காலத்தில் சராசரியாக 440 மி.மீ. மழை கிடைக்கப்பெறும். ஆனால், நடப்பு ஆண்டில் 168.3 மி.மீ. மழையே கிடைக்கப்பெற்றுள்ளது. மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களில், 21 மாவட்டங்களில் மழை குறைவு 60 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

அதாவது, இந்த மாவட்டங்களில் 40 சதவீதம் வரையே வடகிழக்கு பருவத்தில் மழை கிடைக்கப்பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 11 மாவட்டங்களில் மழை குறைவு 35 முதல் 59 சதவீதமாக உள்ளது.

வறட்சி நிலை அறிக்கை,வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் வறட்சி சூழ்நிலை உருவாகி உள்ளது. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மாவட்டங்களில் 10 சதவீத அளவு கிராமங்களில் பயிர் நிலை நேரடி ஆய்வு செய்யப்பட வேண்டும்.

அதன் பின்னரே மாவட்டங்கள் வறட்சி பாதித்தவையாக அறிவிக்க இயலும். எனவே, சென்னை நீங்கலாக இதர மாவட்டங்களை நேரடி ஆய்வு செய்து, பயிர் நிலவரங்கள் மற்றும் வறட்சி நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளித்திட மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதை மேற்பார்வையிட்டு அரசுக்கு விரைந்து அறிக்கை அளிக்க ஏதுவாக அமைச்சர்கள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுக்கள் உடனடியாக அமைக்கப்படும். இந்த குழுக்கள் 9.1.2017 வரை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து 10.1.2017 அன்று தங்களது அறிக்கையினை அரசுக்கு அளிக்கும்.

இந்த அறிக்கைகளின் அடிப்படையில், வறட்சி பாதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு தேவையான நிவாரணங்கள் அனைத்தையும் அரசு வழங்கும் என்று உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

பயிர் நிலைமைகள் குறித்து உயர்மட்ட குழு அறிக்கை அளித்தவுடன், பயிர் பாதிப்புக்கு உரிய நிவாரண தொகையை அரசு வழங்கும் என்ற உத்தரவாதத்தையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். அரசு வழங்கும் பயிர் நிவாரண தொகை தவிர, பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டு தொகையையும் பெற இயலும்.

டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள 12.86 லட்சம் ஏக்கர் நிலங்களில் 11.01 லட்சம் ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. அதாவது 86 சதவீத பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. 5.48 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

இந்த பயிர்க்காப்பீட்டுக்கான பிரிமியம் தொகையாக விவசாயிகள் 44.81 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர். அதே போன்று, டெல்டா அல்லாத பகுதிகளில் 6.71 லட்சம் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்துள்ளனர். இந்த பயிர்க்காப்பீட்டுக்காக பிரிமியம் தொகையாக விவசாயிகள் 36.30 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர்.

விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு பிரிமியம் தொகைக்கான மாநில அரசின் பங்காக 410 கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது. நெல் சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள் பயிர் பாதிப்பு அளவைப் பொறுத்து ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு தொகையாக பெற இயலும்.

இதர பயிர்களை விவசாயம் செய்துள்ள விவசாயிகள் பயிர் பாதிப்பு அளவைப் பொறுத்து இழப்பீடு பெற இயலும். பயிர் பாதிப்பு நிலைமைகளை நேரில் கண்டறிந்து உயர்மட்ட குழுக்கள் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்படும் என்பதால், தற்போதுள்ள வறட்சி நிலை குறித்து விவசாயிகள் யாரும் எந்த வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் விவசாயிகளை பாதுகாப்பது தமிழக அரசின் கடமை. அந்த கடமையை தமிழ்நாடு அரசு செவ்வனே நிறைவேற்றும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media