விவசாயிகளின் வேதனை – அமைச்சருக்கு வேடிக்கை

January 7, 2017 5:37 am
விவசாயிகளின் வேதனை – அமைச்சருக்கு வேடிக்கை

இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை, இரக்கமற்ற மனிதருக்கு இதுவும் ஒரு வாடிக்கை என்று அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் பாடினார்.

அவரது கட்சியை சேர்ந்த அமைச்சர் எம்.சி. சம்பத்தே அதற்கு உதாரணமாக செயல்படுகிறார் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

இந்திய விவசாயம் பருவக்காற்றின் சூதாட்டம் என்று சொல்லப் படுவதுண்டு.

ஆனால் தமிழக விவசாயிகளின் முடிவோ அதிர்ச்சி அல்லது தற்கொலை மரணமாக இருக்கும் என்று இப்போதுதான் தெரிகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்தாண்டு பருவ மழை பொய்த்ததாலும்,போதுமான அளவு காவிரி தண்ணீர் கிடைக்காததாலும், முப்போகம் விளைந்த பூமி வறண்டு பொய் பாளம், பாளமாக வெடித்துக் கிடக்கிறது.

கடன் வாங்கி ஒரு போக சாகுபடியாவது செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தனர் விவசாயிகள்.

அப்படி முயன்ற விவசாயிகளின் விலா எலும்பை, பொய்த்துப்போன பருவ மழையும், வற்றிப்போன காவிரியும் ஒடித்து விட்டது.

தண்ணீர் இல்லாமல் கடும் வறட்சியில் கருகிய பயிர்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுத விவசாயிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிர்ச்சியிலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்தனர்.

இதைக் கண்டு அதிர்ந்து போன தேசிய மனித உரிமை ஆணையமே தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

அதுவரை அயர்ந்து தூங்கி கொண்டிருந்த, தமிழக அரசு சற்றே கண் விழித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவை,வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆய்வு செய்ய அனுப்பி வைத்தது.

அப்படியாவது நிவாரணம் கிடைக்கும் என்று ஓரளவு ஆறுதல் அடைந்த விவசாயிகளின் மத்தியில், அமைச்சர் பெருமக்கள் உதிர்த்த கருத்துக்கள், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருந்தது.

அதனால் விவசாயிகள் மட்டுமன்றி அனைத்து தரப்பினரும், தமிழ அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்த அமைச்சர் எம்.சி. சம்பத், விவசாயிகளின் இறப்பு உடல் உபாதை மற்றும் வயோதிகத்தால் ஏற்பட்ட இயற்கை மரணம் என்று அதிர்ச்சி தகவலைக் கொடுத்தார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அமைச்சர்களை வாய் திறக்க தடை உத்தரவு பிறப்பித்திருந்தது ஏன் என்று இப்போதுதான் தெரிகிறது.

பேச வேண்டியதை பேசவில்லை என்றாலும் தவறில்லை, பேசக்கூடாததை பேசி எதற்காக இப்படி விவசாயிகளின் வேதனையோடு விளையாட வேண்டும்?.

என்ன செய்வது? விவசாயிகளின் வேதனை சம்பத் போன்ற அமைச்சர்களுக்கு வேடிக்கையாகி விட்டது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media