கடனுக்காக மனைவி படும் அவதிகள்? அறிந்தும் அறியாத கணவர்கள்?!

November 22, 2016 6:46 am
கடனுக்காக மனைவி படும் அவதிகள்? அறிந்தும் அறியாத கணவர்கள்?!

மனதோடு மட்டும்….. 

‘பணம்’ இது ஒன்றிற்காக மனிதன் எதையும் செய்வான் என்பதை கண் முன்னே காணும் துர்பாக்கிய நிலை நமக்கு இன்று. நாளை என்ன நடக்கும் என்று தெரியாத உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே மனிதன் சமயங்களில் மறந்துவிடுகிறான். ஒரே பாடல் ஓஹோனு வாழ்க்கை சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்பதை நம்பாமல் மனிதன் ஆடும் ஆட்டத்தில் அவன் குடும்பத்தினரே அதிகம் அவதிக்குள்ளாகிறார்கள். முக்கியமாக இறுதிவரை கை விடமாட்டான் என்றெண்ணிய கணவன் பணத்திற்காக தன்னை பலியிடுவதை அறியாமலேயே மனைவி இருப்பது இன்றைய குடும்பங்களில் சகஜமான ஒன்றாகி விட்டதோ என அச்சம் ஏற்படுகிறது.

குடும்பத்தில் கணவன்/மனைவி தனது பணியின் காரணமாகவோ சொந்த விஷயமாகவோ செய்து வரும் விசயங்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய விபரீதத்தில் கொண்டுபோய் விடும் என்பதை நம்மில் பலரும் அறியாமல் இருக்கிறோம். நமக்கெல்லாம் நடந்தபிறகு தானே ஞானோதயம் பிறக்கும், வரும்முன் காப்பது என்ற ஒன்றே தற்போது இல்லாமல் போய்விட்டது. இன்றைய நாள் முடிந்தது நாளையை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற அசட்டுத் தனம் நல்லது அல்ல.

சொந்தத் தொழில் செய்பவர்கள், அரசாங்க வேலை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் பணத்திற்காக அகலக் கால் வைப்பது வெகு சாதாரணமாகி விட்டது. இருப்பதை வைத்து திருப்தியாக வாழலாம் என்ற காலம் மலையேறிவிட்டது. எதில் இன்வெஸ்ட் பண்ணினால் பணம் பல மடங்காகும் என யோசிக்காதவர்கள் இல்லை. கடன் வாங்கியாவது தொழிலை பெரிதாக்கணும் என்ற ஆசை, வெறியாக மாறி பல குடும்பங்களை நிம்மதியின்றி செய்துக் கொண்டிருக்கிறது. நன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் குடும்பத்தின் ஒத்துமொத்த சந்தோசமும் ஒரு சில நிமிடங்களில் தொலைந்து சிதைந்துப் போக ஆண் காரணமாகிறான். இதை ஆண்கள் விரும்பிச் செய்கிறார்களா? அல்லது மனைவியின் வற்புறுத்தலா? அல்லது மனைவியின் மீதான அதிக அன்பா? என தெரியவில்லை. ஆனால் என்றாவது ஒருநாள் எல்லோரின் முன்பும் அவமானப்பட்டு தலைக் கவிழ்ந்து நிற்பது அந்த பெண் தான்…..

அப்படி அந்த கணவன் என்ன தான் செய்து விட்டான் என்கிறீர்களா ? மனைவியின் பெயரில் கார், வீடு, நிலம், தோட்டம் என சொத்துக்களை வாங்குவது அல்லது தன் பெயரில் இருந்து மனைவியின் பெயருக்கு மாற்றுவது. பெரும்பாலான அப்பர் மிடில்கிளாஸ் குடும்பங்களில் இதுதான் நடை முறை. நல்லது தானே. இதில் என்ன பிரச்னை உங்களுக்கு என தோன்றுகிறதா …

எல்லாம் நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. மனைவிக்கும் பெருமையாக இருக்கும், உறவினர்கள்/நண்பர்கள் முன்னிலையில் கணவன், ‘என் பெயரில் எதுவும் இல்லப்பா எல்லாம் என் மனைவி பேர்ல தான் இருக்கு’ என்று சொல்லும்போது…! இதே கணவன் ஒரு சூழ்நிலையில் மனைவியின் கையொப்பம் இட்ட காசோலையை கொடுத்து வட்டிக்கு பணம் கடன் வாங்குவான். ஒன்று பலவாகி …மனைவியும் கணவன் தானே அவருக்கு தெரியாதா என கேட்கும் போதெல்லாம் கையெழுத்து போட்டுக் கொடுக்கிறாள் என்றால் அவள் தலையில் அவளே மண்ணை அள்ளி போட்டுக்கொள்கிறாள் என்று அர்த்தம் !

எங்களுக்கு தெரிந்த நண்பர் ஒருவரது குடும்பம் வசதியானது, சொந்த தொழில், அருமையான மனைவி ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகளுடன் சந்தோசமான நிறைவான வாழ்க்கை. வெளியில் இருந்து பார்க்கும் எங்களுக்கு தெரிந்தது இவை மட்டும் தான். கடந்த வருடம் நண்பர் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். துக்கத்திற்கு வந்தவர்களில் கடன்காரர்களின் எண்ணிக்கைத்தான் அதிகம். அத்தனை பேரும் கணவரை இழந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் மனைவியை சூழ்ந்துக் கொண்டு எனக்கு கொடுக்க வேண்டியப் பணத்தை எப்போ தர போறிங்க…? சீக்ரம் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க? இவருக்கு இப்படி திடீர் சாவு வரும்னு எதிர்பார்கலையே, எங்களுக்கு ஒரு பதிலை சொல்லிட்டு மறுவேலை பாருங்க’ என்ற மிரட்டும் விதத்திலுமாக பலரும் மாறி மாறி பேச நிலைகுலைந்துப் போய்விட்டார் மனைவி. இத்தனை பேரிடமா பணம் வாங்கி இருப்பார்? ஆதாரம் என்ன? மனதில் தோன்றியதை கேட்டும் விட்டார். எல்லோரின் ஒட்டு மொத்த பதில் ‘உங்களின் கையெழுத்து போடப்பட்ட பிளாங்க் செக் கொடுத்திருக்கிறார்’

கணவர் கேட்கிறார் என்பதற்காக சரியாக விசாரிக்காமல் கேட்டதும் கையெழுத்து போட்டு கொடுத்ததன் பலன் இதுவென மிக தாமதமாக புரிந்து கொண்டார் மனைவி. வந்தவர்கள் சொன்ன கணக்குப் படி பார்த்தால் தொகை 2 கோடியை தாண்டுமாம். எல்லோரையும் பார்த்து ஒரு நாலு மாசம் டைம் கொடுங்க, அடைச்சிடுறேன்’ என மெல்லிய குரலில் கூற இவ்வளவு நாள் நெருங்கிப் பழகிய மனிதனின் சடலத்தை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து ‘சொன்னப்படி கொடுத்துடுங்கமா’ என்று சொல்லிவிட்டு கடந்துச் சென்றே விட்டது அந்த கூட்டம்.

துக்கத்திற்கு வந்த உறவினர்களின் கூட்டம் அகன்றதும் கணவரின் டைரியில் விவரங்கள் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என தேடித் பார்த்திருக்கிறார். வங்கியில் லோன் வாங்கியது உட்பட ஒரு சில கணக்குகள் மட்டுமே இருந்தன. வாய் மூலமாக நம்பிக்கையின் பெயரில் வாங்கியவையே அதிகம் என்ற உண்மை புரிந்து அதிர்ந்துவிட்டார். இன்சூரன்ஸ் பணம், வங்கி சேமிப்பு, நகைகள் மூலமாக ஓரளவு கடன் தொகை அடைக்கப்பட்டது. ‘நான் ஜாமீன் போட்டு வாங்கிக் கொடுத்தது மேடம்’ என்று அவரது கம்பெனியின் மேனேஜரும் ஒரு செக்கை நீட்ட யாரை நம்பி எந்த காரியத்தை ஒப்படைப்பது என திணறிவிட்டார். குழப்பத்தின் உச்சத்தில் ஆறு மாதங்கள் ஓடி விட்டது, . அப்போது கோர்ட்டில் இருந்து இவரது பெயருக்கு ஒரு நோட்டிஸ் வந்தது செக் மோசடி என்று !!

நன்றாக சென்றுக் கொண்டிருந்த நிறுவனத்தின் லாபத்தை கணக்கில் கொண்டு புதிதாக இரண்டு தொழில்களில் கணவர் முதலீடு செய்திருக்கிறார். மேலும் வெளியே தெரிந்தவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருக்கிறார், இறக்கும் வரை வட்டியை சரியாக கட்டியே வந்திருக்கிறார், இன்னும் இரண்டு வருடங்களில் வட்டியுடன் அசலையும் அடைத்துவிடலாம் என்று அவர் கணக்கு போட்டிருக்கிறார். ஆனால் விதியின் கணக்கு ?!

‘பெண்’ என்றால்

இப்படியாக ஏற்படும் பிரச்சனை ஒரு விதம் என்றால் அடுத்தவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது அல்லது அடுத்தவருக்காக இவர் கடன் பெற்றுத் தருவது என மற்றொரு விதம் இருக்கிறது. இது மிக ஆபத்தானது, இதில் இருவருக்கும் நடுவில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனை கணவன் சொல்லாமல் மனைவிக்கு தெரிய வாய்ப்பே இல்லை. பணம் திருப்பித் தருவது தாமதமானால் கணவன் இருக்கும்/இல்லாத பட்சத்தில் மனைவியை மிரட்டுவது கண்டிப்பாக நடக்கும், கொடுமை என்ன வென்றால் சம்பந்தப் பட்ட இருவருமே இவரை சாடுவார்கள். ஏதுமறியா மனைவி என்ன செய்வார்? பேச்சுக்கு வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் என் முன் வைத்தா என் கணவரிடம் பணத்தை கொடுத்தீர்கள், எனக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது’ என்று ஆனால் ‘நீதானமா அவரோட மனைவி உனக்கு சம்பந்தம் இல்லைனா எப்படி’ என தொடங்கும் பேச்சு ஒரு கட்டத்தில் ஆபாசப் பேச்சாக மாறும். எதிரில் நிற்பது ‘பெண்’ எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் என்பது நமது சமூகத்தின் சாபக்கேடு ஆயிற்றே.

பணத்தேவை அவசரம் என்றால் வெகு சுலபமாக செக் கொடுத்து பெற்றுக் கொள்கிறார்கள், சில காலம் கழித்து கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை என்றதும் சிறிதும் யோசிக்காமல் கோர்ட் படியேறி விடுகிறார்கள். பெண் பெயரில் கொடுக்கப் பட்ட செக் என்றால் அவசியம் பெண் நீதிமன்றம் சென்றாக வேண்டும், எனக்கு இங்கெல்லாம் சென்று பழக்கமில்லை என்று சமாளிக்க முடியாது. கூண்டில் ஏறி நின்று நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்து தான் ஆகவேண்டும்.

கணவன் இறந்தப்பின் அந்த மனைவி படும் துன்பம் கொஞ்ச நஞ்சமில்லை… அடுப்படி, வாசப்படி, குழந்தைகள் என்று இருந்தவர் தற்போது கோர்ட்டுக்கும் வக்கீல் வீட்டுக்குமாக அலைந்துக் கொண்டிருக்கிறார். சொத்துகளின் மீது வாங்கப்பட்ட கடன் என்பதால் அவற்றை விற்பதும் சிக்கலாக இருக்கிறது… சந்தர்ப்பவாதிகள் மிக குறைவான விலைக்கு கேட்பதுவும் நடக்கிறது.

கணவனின் சந்தோசத்தில் பங்கு கொண்டவர் கஷ்டத்திலும் பங்கு கொண்டால் என்ன என்ற கேள்வி எழலாம். கணவருக்காக எதையும் செய்யலாம் தான் ஆனால் நேற்று வரை மனைவி என்பவள் தன்னில் சரிபாதி எதாக இருந்தாலும் இருவருக்கும் தெரிந்தே இருக்கவேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் வேலை புருஷ லட்சணம் என்பதை போல கணவர்கள் இருந்தால் அவர்களின் மனைவி உண்மையில் பரிதாபத்துக்கு உரியவர்கள் தான்.

பிசினஸ் மக்களுக்கு கடன் வாங்குவது என்பது ஒரு வகை பணப் பரிமாற்றம் அவ்வளவு தான். பிசினஸ் பொறுத்தவரை அவர் செய்தது அனைத்தும் சரியே. ஆனால் குடும்பத்தை நடுத்தெருவில் அல்லவா அவர் நிறுத்திவிட்டு போய்விட்டார். யாருக்கு எப்போது என்ன நேரும் என்று சொல்லமுடியாது. நிலையாமை என்பதை அடிக்கடி நினைத்துப் பார்த்தால் இது போன்ற சிக்கல்கள் ஏற்படாது. மனைவியின் பெயருக்கு இடம் வாங்குவதும், தனது சொத்தை எழுதி வைப்பதும் பெரிதல்ல, அதை பற்றிய முழு வரவு செலவையும் மனைவியிடம் அவ்வபோது சொல்லிவிடவேண்டும். அப்படியெல்லாம் ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்பவர்கள் மனைவியின் பெயருக்கு சொத்துக்களை மாற்றாமல் இருப்பது உத்தமம்.

யாருக்காக சம்பாத்தியம்

தனது பெயரில் கணவருக்கு சொத்துக்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்ட கணக்குகளை வீட்டினருக்கு தெரியும் அளவில் எழுதி வைக்கவேண்டும். கம்பெனியின் நிர்வாகத்திற்காக மேனேஜர், அக்வுண்டன்ட், ஆடிட்டர் , குடும்ப வக்கீல் என்று பலர் இருந்தாலும் யாரையும் நம்பமுடிவதில்லை. பண வரவு செலவுகளைப் பொறுத்தவரை கணவன் மனைவி இருவருக்கும் தெரிந்திருப்பது நல்லது.

குடும்ப நண்பரின் மனைவி படித்தவராக இருந்தும் தொழில் சம்பந்தமான பண பரிவர்த்தனைகளை மனைவிடம் பகிர்ந்துக் கொள்ளாதது சுத்த அசட்டுத்தனம். தொழிலை விரிவுப் படுத்துகிறேன் பேர்வழி என்று அகலக்கால் வைப்பது அவரவர் விருப்பம். கடனுக்கு ஈடாக மனைவியின் செக்கை பயன்படுத்துவதும் தவறில்லை, ஆனால் அதன் முழு விவரத்தையும் மனைவிக்கு தெரிவித்து விடவேண்டும். ‘பொம்பளைங்கிட்ட எல்லாத்தையுமா சொல்லிக்கிட்டு இருப்பாங்க’ என்பதே ‘இன்றும்’ பல ஆண்களின் எண்ணமாக இருக்கிறது.

கணவன் மனைவி உறவு என்பது ஒளிவுமறைவு அற்ற வெளிப்படையான ஒன்றாக இருக்கவேண்டும். இருவரில் யாரோ ஒருவர் தனக்கு பிடித்த மாதிரி மட்டும் சுயநலமாக செயல்படுவதால் நேரக் கூடிய இன்னல்களால் நேரடியான பாதிப்பு அவர்களின் குழந்தைகளுக்குதான். டீன்ஏஜ் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கும் வீட்டின் பொருளாதார நிலை தெரிந்திருப்பது நல்லது. பல சமூக அவலங்கள் பணத்தால் தான் ஏற்படுகிறது என்ற நினைவில் வைத்து ஒவ்வொன்றையும் கவனமாக கையாளவேண்டும்.

சம்பாதிப்பதும் சொத்து சேர்ப்பதும் குடும்பத்தினரின் நிம்மதியான வாழ்வுக்காகத்தான். நமது இருப்பும் இறப்பும் நல்ல நினைவுகளாக மட்டுமே பதிய வேண்டும், அது ஒன்றுதான் நமது வாழ்வை அர்த்தமுள்ளதாகும்.

தனது பெயரில் சொத்துகள் இருப்பதால் மனைவி கணவருக்கு கொடுக்கும் நெருக்கடிகள் பற்றி அடுத்த பதிவில்…

தொடர்ந்து பேசுகிறேன்…

உங்களின் ‘மனதோடு மட்டும்’

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media