கேப்டன் பொறுப்பில் இருந்து விலகல்,தோனி திடீர் அதிரடி முடிவு ஏன்..? – நண்பர் விளக்கம்..,

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகல்,தோனி திடீர் அதிரடி முடிவு ஏன்..? –  நண்பர் விளக்கம்..,

நியூடெல்லி : 2014ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அறிவித்து அதிர்ச்சியை கொடுத்தது போலவே, இப்போதும் எதிர்பார்க்காத சமயத்தில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் எம்.எஸ்.தோனி.

2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்வியின் எதிரொலியால் ராகுல் டிராவிட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன்பின் சச்சின், கங்குலி என மூத்த வீரர்களின் பெயர் பரிசீலனையில் இருந்தபோது, மூத்த வீரர்களும் தேர்வுக் குழுவும் ஒரு மனதாக தோனியை இந்திய அணியின் கேப்டனாக தேர்ந்தெடுத்தனர்.

செப்டம்பர் மாதம் 2007இல் நடைபெற்ற இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் தோனியின் கேப்டன் பயணம் தொடங்கியது. பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் பவுல் அவுட் முறையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார் தோனி.

மூத்த வீரர்களான சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் இருபது ஓவர் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கில் இருபது ஓவர் போட்டிகளில் இருந்து விலகிக் கொண்டனர்.

இளம் வீரர்களை வைத்துக் கொண்டு முதல் இருபது ஓவர் உலகக் கோப்பையையே தோனி வென்று காட்டினார்.அதன்பின் சிறந்த கேப்டன் அணிக்கு கிடைத்துவிட்டதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தோனியை நம்பினர்.

அந்த நம்பிக்கையை காப்பாற்றும் நோக்கில் 2011 உலகக் கோப்பை மற்றும் 2013இல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி என வரிசையாக ஐசிசி நடத்தும் தொடர்களை வென்று சாதித்தார், ஐசிசி நடத்தும் இந்த மூன்று தொடர்களையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே.

இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் இந்திய ஒருநாள் மற்றும் 20 ஓவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஒரு வீரராக தொடர்ந்து விளையாட தயாராக இருப்பதாகவும் தோனி தெரிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்துள்ளது,அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சமீப காலமாக டோனியின் ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்ததும், கேப்டனாக விராட் கோலி சிறப்பாக செயல்படுவதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் காரணமாக தோனி, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தோனியின் முடிவு திடீரென எடுக்கப்பட்டது அல்ல என்று அவரது நெருங்கிய நண்பர் விளக்கம் அளித்துள்ளார்.

தோனியின் நெருங்கிய நண்பரும் நம்பிக்கைக்குரியவருமான அருண் பாண்டே இது பற்றி கூறுகையில் இது போன்ற முடிவுகளை ஒருநாள் இரவில் எடுக்க முடியாது. இது நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு.

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி ஒரு வீரராகவும் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ஆகவும் செயல்பட இதுதான் சரியான தருணம் என்று கருதிய தோனி,இந்த முடிவை எடுத்துள்ளார்.

வரவுள்ள அடுத்த உலககோப்பைக்குரிய அணியை உருவாக்கு எண்ணத்தில் இதை நினைத்திருக்க கூடும். ஒரு விஷயத்தையே பற்றியிருக்கும் நபர் அல்ல தோனி.

அவரைப்பொறுத்தவரை அணியின் நலன் தான் முக்கியம்” என்றார். அருண் பாண்டே தோனியின் வணிகம் சார்ந்த விஷயங்களையும் மேலாண்மை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media