பிரம்மிப்பூட்டும் தொழில்நுட்பத்தை கொண்டு உருவான புது 2000 & 500 ரூபாய்… புது தாளில் இருக்கும் சில சுவாரசியங்கள்

November 9, 2016 10:10 am
பிரம்மிப்பூட்டும் தொழில்நுட்பத்தை கொண்டு உருவான புது 2000 & 500 ரூபாய்… புது தாளில் இருக்கும் சில சுவாரசியங்கள்

மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லுபடியாகாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தாலுமே, அறிவிப்பின் ஒரு பகுதி, தீடீர் முடிவாக தெரிந்திருக்கவில்லை. சில நாட்களாகவே, 2000 ரூபாய் நோட்டுக்கள், இணையதளத்தில் வலம் வந்தபடியே இருக்கின்றன. விரைவில் 2000 ரூபாய் நோட்டுக்கள் நடைமுறை பயன்பாட்டிற்கு அமல்படுத்தப்படும் என்றும் மோடி அறிவித்திருந்தார். ஆனால், 2000 ரூபாய் நோட்டின் புகைப்படங்கள் சாதாரணமாக பரவலாகாமல், அதி அற்புத வதந்திகளோடு பரவியது.

500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகாது எனும் அறிவிப்பு வருவதற்கு முன்னரே வாட்ஸப்பில் வந்து கொண்டிருக்கிறது இந்த வதந்தி.புது 2000 ரூபாய் நோட்டில் “மைக்ரோ நானோ ஜி.பி.எஸ் சிப்” ஒன்று இருக்கும், அதைக் கொண்டு ஒவ்வொரு நோட்டையும் சாட்டிலைட் வழியே ட்ராக் செய்ய முடியும் என்பது தான் பரவிக் கொண்டிருக்கும் வதந்தி.

இதில், என்.ஜி.சி போன்ற தொழில்நுட்ப ரீதியான பெயர் சுருக்கங்களும் இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. ஜீ ந்யூஸ் வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் வதந்திகள், “2000 ரூபாய் நோட்டுக்களில் பதியப்பட்டிருக்கும் மைக்ரோ சிப்களை கொண்டு, நிலத்திற்கு அடியில் 120 மீட்டர் இருந்தாலும் கூட அவற்றை ட்ராக் செய்ய முடியும்” போன்ற செய்தி தொகுப்பிற்கு காரணமாக இருக்கின்றன.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், பிரம்மிப்பூட்டுவதாக இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை கொண்டு விண்வெளியில் இருந்தே, குவிந்து கிடக்கும் பணத்தை கண்டுபிடிக்கலாம். போலீசாருக்கும், ஊழலுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் வாழ்க்கை எளிதாகும். அமெரிக்க எஞ்சினியர்கள் ரேடியோ அதிர்வெண் அடையாள சிப்களை தாளில் பதிக்க ஒரு வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதைக் கொண்டு ட்ராக் செய்ய முடியும். இந்திய ரிசர்வ் வங்கி, புது 2000 ரூபாய் நோட்டுக்கள் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்த போது, என்.ஜி.சி பற்றி எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை.

புது 2000 தாளில் சில சுவாரசியங்களும் இருக்கின்றன. அது ஊதா வண்ணத்தில் இருக்கும் என்பதோடு, செவ்வாய் கிரகம் வரை சென்று வந்த இந்திய விண்கலமான மங்கள்யானின் படமும் அதில் இடம் பெறும். பாதுகாப்பு தொழிநுட்பங்கள் குறித்து எந்த தகவலும் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டிருக்கவில்லை. பாதுகாப்பு அல்லது ட்ராக்கிங் தொழில்நுட்பங்கள் எதாவது செயல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அது குறித்து விளம்பரம் செய்யவே ரிசர்வ் வங்கி எத்தனிக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

சட்ட முறைகேடான பணத்தை கண்டுபிடிக்க வேண்டிய காரணத்தால், அரசு நம்மிடம் அது குறித்து சொல்லாமல் இருக்கலாம் என வதந்திகள் எப்போதும் பரவும். ஆனால், இப்படிப்பட்ட தகவல் எப்படி மறைத்து வைக்கப்படும் என்பதும், 2000 ரூபாய் நோட்டுக்கள் நடைமுறைபடுத்தப்பட்ட பிறகு சிப்-ஐ கண்டுபிடிக்கமாட்டார்களா ஆகிய கேள்விகள் இங்கே உதிக்கின்றன. மண்ணுக்கு அடியில் குவிந்து கிடக்கும் பணத்தை சாட்டிலைட்களால் ட்ராக் செய்ய முடியும் என்பதை தவிர்த்துப் பார்த்தால், இந்த தொழில்நுட்பம் சாத்தியம் எனத் தோன்றினாலும் கூட, இச்சமயத்தில் , இப்படி ஒரு தொழில்நுட்பத்தை பணத்தில் செயல்படுத்தி பார்ப்பது சாத்தியமற்றது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media