கிருஷ்ணா நதி நீர் பேச்சுவார்த்தை; இன்று ஆந்திரா செல்லும் ஓ.பி.எஸ்!

January 12, 2017 3:56 am
கிருஷ்ணா நதி நீர் பேச்சுவார்த்தை; இன்று ஆந்திரா செல்லும் ஓ.பி.எஸ்!

தமிழகத்தை வறட்சி மாநிலமாக தமிழக அரசு அறிவிக்க இருக்கும் இந்த நிலையில், தமிழகம் முழுக்க குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.குறிப்பாக சென்னை பெருநகரில் இப்போதே தண்ணீர் பற்றாக்குறை தலை விரித்தாடுகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் “ வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால், சென்னையில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. தற்போதுள்ள சூழலில் தமிழகத்தில் அதிகபட்சமாக 10 முதல் 100 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துக்கு உட்பட்ட 46,438 நீர்நிலைகளில் குடிநீர் சப்ளை 83 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.சென்னையைத் தவிர்த்து, பிற மாவட்டங்களில் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. நெல் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் மனமுடைந்து வருகின்றனர். போதிய மழையின்மையால் விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகின.இதனைத் தீர்க்க, உடனடியாக கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சென்னைக்குக் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கண்டலேறு அணையில்இருந்து ஆந்திர – தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே கிருஷ்ணா நதி நீரை பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில், உடனடியாக ஒப்பந்தப்படி 12 டி.எம்.சி தண்ணீர் திறந்து விடவேண்டும். தமிழகத்துக்கு குறிப்பாக சென்னையின் முக்கிய நீர் ஆதாரம் வடகிழக்குப் பருவமழைதான். ஆனால், இந்த ஆண்டு, வடகிழக்குப் பருவ மழை போதிய அளவில் பெய்ய வில்லை. இதனால், சென்னைக்கு 57% அளவுக்கு குடிநீர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே, சென்னையில் உள்ள குடிநீர் ஆதாரங்களான ஏரிகளின் நீர்மட்டம்வெகுவாகக் குறைந்துள்ளது.

எனவே, சென்னையின் குடிநீர் பஞ்சத்தைப் போக்க கிருஷ்ணா நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டியது மிகவும் அவசியமாகிறது.எனவே, ஆந்திர அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தி, தமிழகத்துக்கு உரிய நீரை கிருஷ்ணா நதியில் திறந்து விட உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் ” என்று கடிதம் எழுதினார். முதல்வர் பன்னீர்செல்வம் 12 டி.எம்.சி தண்ணீர் கேட்ட நிலையில் 1000 கன அடி நீரை மட்டுமே ஆந்திரா திறந்துவிட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் தேவைக்குக் கூட அந்த தண்ணீர் போதாது எனும் நிலையில், . பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி இன்று காலை ஆந்திர மாநிலத்திற்குச் செல்கிறார். தலைநகர் அமராவதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீரை பெற்று வருவார் பன்னீர் செல்வம். தமிழக முதல்வர் ஒருவர் ஆந்திர மாநிலத்திற்குச் சென்று தண்ணீர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media