”அதிமுக உடைவதை உறுதி செய்த ரெய்டும், ராவின் பேட்டியும்” மௌனம் காக்கும் ஓ.பி.எஸ்

December 27, 2016 8:22 am
”அதிமுக உடைவதை உறுதி செய்த ரெய்டும், ராவின் பேட்டியும்” மௌனம் காக்கும் ஓ.பி.எஸ்

அரசு இயந்திரமும், ஆட்சி நிர்வாகமும் இணைந்து நடக்கும் போதுதான் அது வெற்றிகரமான அரசு நிர்வாகமாக இருக்கும். அதற்கு ஒரே எடுத்துக் காட்டு ஜெயலலிதா தலைமையில் அச்சுப் பிசகாமல் நடந்த ஆட்சிதான். அதற்கான ஆளுமையை அவர் வளர்த்துக் கொண்டார். ஆனால் அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்த போதே ஆளும் நிர்வாகம் மத்திய அரசின் பக்கம் சாய்ந்து விட்டதை பல நிகழ்வுகள் உறுதிப்படுத்தின.

ஜெயலலிதா எதிர்த்த பல திட்டங்களுக்கு ஓடி ஓடி ஆதரவு தெரிவித்த மாநில அரசு, இந்த ஒப்புதலை ஜெயலலிதாவின் சம்மதத்தின் பேரில் நடத்தியதா? அல்லது அரசை இப்போதைக்கு காப்பாற்றிக் கொள்வோம் அதற்கு மத்திய அரசோடு சுமூக உறவைப் பேணுவோம் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டதா? என்ற கேள்விகள் ஒரு பக்கம் இருந்த நிலையில்தான். அவர் மரணமடைந்தார் அன்றே பன்னீர்செல்வம் முதல்வரும் ஆனார்.

கடந்த 18-ஆம் தேதி டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து விட்டு தமிழக முதல்வர் திரும்பிய நிலையில்தான் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டிலும் அலுவலகத்திலும் 21-ஆம் தேதி ரெய்டு நடத்தப்பட்டது. அவருக்கு விசாரணைக்கு வர வேண்டும் என்று வருமானவரித்துறை சம்மன் அனுப்பிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று மாலை வீடு திரும்பினார். இன்று காலை பத்திரிகையாளர்களைச் அவர் சந்தித்து பேசிய விஷயங்களில் பல தன்னிலை விளக்கம்.

அதனால் அவர் தெரிவித்த கருத்துக்களுக்குள் செல்வதை விட அவர் சுட்டுக்காட்டும் சூழல் மிக முக்கியமானது. “ஜெயலலிதா இருந்திருந்தால் தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்திருப்பார்களா? தமிழகத்தில் மக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள்” என்பதுதான் அவர் சுட்டிக் காட்டிய, வெளிப்படுத்திய கருத்துக்களில் உள்ள அரசியல் விஷயங்கள். அவர் நேரடியாக பெயரைக் குறிப்பிடாமல் சொல்வது பன்னீர்செல்வத்தை. பன்னீர் செல்வத்தால் அவருக்குக் கீழே இருக்கும் அதிகாரிகளையும், மக்களையும் காப்பாற்ற முடியவில்லை என்கிறார்.

தான் தவறே செய்திருந்தாலும் துப்பாக்கி முனையில் தன்னை வீட்டுச் சிறையில் வைக்கும் உரிமை வருமான வரித்துறைக்கு இல்லை. தமிழக அரசு கையலாகாத அரசாக ஆகி விட்டதால் இது போன்று நடக்கிறது என்பதுதான் ராம மோகன் ராவ் கூறும் குற்றச்சாட்டு.

கடந்த பல மாதங்களாக பல விஷயங்களுக்காக எதிர்க்கட்சிகள் முதல்வர் பன்னீர் செல்வத்திடம் பல கோரிக்கைகளை வைத்து வருகின்றன. மக்களை பாதிக்கும் பல பிரச்னைகளில் கூட வாய் திறக்க மறுக்கும் பன்னீர் செல்வம் இனியும் அப்படி இருக்க முடியாது.

அதிமுக கட்சிக்கும், ஆட்சிக்கும் இடையில் பிளவு ஏற்பட்டிருப்பதையே இது காட்டுகிறது. எப்படி என்றால் அதிமுக பிரமுகர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பேரா.தீரன் போன்றோர் ரெய்டை கண்டித்துள்ளார்கள். ரெய்டு நடந்ததும் ராமமோகன் ராவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி விட்டு கிரிஜா வைத்தியநாதனை அப்பதவிக்கு கொண்டு வந்தது மட்டுமே முதல்வர் செய்த வேலை எனும் போது கிரிஜாவை தலைமைச் செயலாளர் ஆக்குவது என்ற முடிவு எப்போது எடுக்கப்பட்டது. டெல்லியில் வைத்து எடுக்கப்பட்ட முடிவா? தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்த போது அதை ஏன் தமிழக அரசு எதிர்க்கவில்லை, அதிமுக பொதுச்செயலாளர் ஆக இருக்கும் சசிகலா ஒரு தலைமையாகவும், முதல்வராக இருக்கும் பன்னீர் செல்வம் டெல்லி தலைமையின் கீழும் செயல்படுகிறார்களா என்ற சந்தேகங்கள் அதிமுக தொண்டர்களிடமும், மக்களிடமும் வலுத்து வருகிறது. இனியேனும் வாய் திறந்து பன்னீர் செல்வம் பேசுவாரா?

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media