தீபாவின் அரசியல் பிரவேசம்

January 12, 2017 6:39 am
தீபாவின் அரசியல் பிரவேசம்

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று அதிமுக தொண்டர்களில் ஒரு பிரிவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா ரோட்டையொட்டியுள்ள சிவஞானம் சாலையில் உள்ள தீபாவின் வீடடில் அவரை சந்திப்பதற்காக அதிமுக தொண்டர்களும், பொது மக்களும் நாளுக்கு நாள் கூட்டம் கூட்டமாக அதிகளவில் திரள்கிறார்கள்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் ஒரு சில முன்னணி அதிமுக நிர்வாகிகள் சசிகலா மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து வந்த தீபா, சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றத்திலிருந்து தொண்டர்களை சந்தித்து வருகிறார் தீபா.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தனது அரசியல் பயணம் எப்போது தொடங்கும் என்பதை தொண்டர்கள் முன்பு வெளிப்படையாக அறிவித்தார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அவரது பிறந்த நாளான வருகிற 17-ஆம் தேதி அன்று எனது அரசியல் பயணம் தொடங்கும் என்று கூறி இருக்கும் தீபா, அன்று முக்கிய முடிவுகள் சிலவற்றையும் அதிரடியாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் பயணத்தை தொடங்குவதாக அறிவித்துள்ள தீபா, அந்த பயணம் எப்படி இருக்கும்? என்பதை கூறவில்லை. தற்போது தமிழகம் முழுவதும் தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவில் ஒரு பிரிவினரே இதனை தொடங்கி கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். தீபாவை அரசியலுக்கு அழைத்து விதவிதமான பேனர்களையும் அவர்கள் வைத்து வருகிறார்கள். அதில் “இளைய புரட்சித் தலைவியே”, “வருங்கால முதல்வரே”, “அம்மா வழியில் வழி நடத்த வாருங்கள்” என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பேரவையை தீபா அங்கீகரித்து அதற்கு தலைமை தாங்குவாரா? அல்லது எம்.ஜி.ஆர். ஜெயலலிதா பெயருடன் தனிக்கட்சியை தொடங்குவாரா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தனது அரசியல் பயணம் எப்படி? இருக்கும் என்பதை தீபா தெளிவாக அறிவிக்காத நிலையிலும், 17-ஆம் தேதி அவர் தொடங்க இருக்கும் அரசியல் பயணம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தீபாவின் அரசியல் பயணம் குறித்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. வெளி மாவட்டங்களில் மட்டுமே தீபாவின் ஆதரவாளர்கள் கூட்டம் நடத்தி வந்த நிலையில், சென்னையிலும் அவருக்கு ஆதரவாக கூட்டம் நடத்தப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. திருச்சி சௌந்தரராஜன் தீபாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை ஜெயலலிதா அண்ணன் மகள் தீபவால் மட்டுமே நிரப்ப முடியும் . வருகிற 17-ஆம் தேதி எம்.ஜி.ஆர். நினைவு தினத்தன்று அவரது சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர் தனது அரசியல் பிரவேசம் பற்றி தீபா அறிவிக்கவுள்ளார்.

புதிய கட்சியை தொடங்கி, மாநிலம் முழுவதும் அவர் சுற்றுபயணம் செய்து தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். ஜெயலலிதா போன்று அவர் அரசியலில் உயர்ந்த நிலைக்கு வருவது நிச்சயம் என்று கூறினார். அத்துடன் திருச்சி உறையூரில் தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை செய்தார். திருச்சி மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் தீபா வக்கீல் பேரவை தொடங்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, தீப பேரவைக்கு தமிழகம் முழுவதும் வாட்ஸ்-அப் மூலமாகவும் உறுப்பினர் சேர்க்கை தீவீரப்படுத்தப்பட்டுள்ளது. தீபாவின் அரசியல் பிரவேசம் குறித்து வருகிற 17-ஆம் தேதி உறுதியான தகவல் தெரியவரும். அதையடுத்து, அவர் அரசியலில் தாக்குப்பிடிப்பாரா ? அல்லது பத்தோடு பதினொன்றாக இருப்பாரா என்பது போகப்போகத் தெரியவரும்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media