விவசாயிகள் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: தமிழக அரசிடம் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

விவசாயிகள் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: தமிழக அரசிடம் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

விவசாயிகளின் உயிரிழப்புக்கு அதிமுக அரசு முற்றுப்புள்ளி வைத்து, உரிய பரிகாரம் காண வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் போரூரை அடுத்த கோவூரில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தி.மு.க.வினர் மட்டும் அல்லாமல் தமிழ் உணர்வுள்ள அனைவரும் சாதி, மத வேறுபாடு இன்றி ஒருங்கிணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாட வேண்டும் என்று கருணாநிதி ஆணையிட்டார் என்றார்.

பொங்கல் தினமே, தமிழ் புத்தாண்டாக இருக்கவேண்டும் என்று கருணாநிதி ஆணையிட்டார். ஆனால் அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் அதை மாற்றியது வேதனைக்குரியது என்றார்.

தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி உதயமாகும்போது, பொங்கல் திருநாளே தமிழ் புத்தாண்டு என்ற நிலை வரும் என்று அவர் கூறினார்.

மத்திய அரசு பொங்கல் பண்டிகை விருப்ப விடுமுறையாக அறிவித்ததை அடுத்து, முதன் முதலில் தி.மு.க. சார்பில் அறிக்கை வெளியிட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அதைதொடர்ந்து பல கட்சிகள், பல அமைப்பினர் அதனை கண்டித்து எதிர்ப்புகளை தெரிவித்தனர் என்றும் குறிப்பிட்டார்.

பொங்கல் திருநாளுக்கு, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசிய அரசுகள் விடுமுறையும் அறிவித்துள்ளதை குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் உள்ள நிலை வேதனை அளிப்பதாகக் கூறினார்.

வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு நாம் தெரிவிக்கும் வருத்தங்கள் மற்றும் அனுதாபங்கள் முக்கியம் அல்ல என்றும், அந்த அவலநிலைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media