மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்; தீபா உறுதி

January 12, 2017 4:08 am
மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்; தீபா உறுதி

யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன் என்று கூறியுள்ள ஜெயலலிதா அண்ணன் மக்கள் தீபா, தமது தொண்டர்களும் அஞ்சமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், எம்.எல்.ஏக்கள், எம்.பி க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை வளைத்து, சசிகலா அதிமுக வின் பொது செயலாளராக ஆகிவிட்டார்,

எனினும் அதை கொஞ்சம் கூட ஏற்காத அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள், சசிகலாவை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

சசிகலாவின் படத்தின் மீது சாணி பூசியும், போஸ்டர்களை கிழித்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும், சசிகலா பொது செயலாளராக பொறுப்பேற்றாலும், பெரும்பாலான வட மாவட்டங்களில், தீபாவுக்கு ஆதரவாக அமைப்புகள் உருவாக்கப் பட்டு நாள் தோறும் லட்சக் கணக்கான தொண்டர்கள் இனைந்து வருகின்றனர்.

தற்போது அது டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் வலுவாகி வருகிறது.

தன்னெழுச்சியாக தீபாவுக்கு தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து வருவதைக் கண்டு கடும் அச்சம் அடைந்துள்ள, சசிகலா தரப்பினர், அதைத் தடுத்து நிறுத்த பல்வேறு பேரங்களை பேசியும் எடுபடாமல் போனது.

அதை அடுத்து அவர்மீது மத சாயம் பூசுவது உள்ளிட்ட அவதூறுகளை வாட்ஸ்-அப் மூலம் பரப்பியும், மிரட்டல்கள் விடுத்தும் பலன் இல்லாமல் போனது.

மாறாக, தமிழகம் முழுவதும் தீபா ஆதரவு பெருகி வருவதுடன், தினமும் அவரது வீட்டின் முன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

இதனால், அங்கு வரும் தொண்டர்களை கண்காணித்து அவர்களை மிரட்டும் நடவடிக்கையிலும் சசிகலா தரப்பு இறங்கியது.

அதனால், சசிகலாவின் மீதான வெறுப்பு தொண்டர்கள் மத்தியில் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், எந்த மிரட்டலுக்கும் நான் அடிபணிய மாட்டேன் என்று கூறிய தீபா, தமது தொண்டர்களும் அடிபணிய மாட்டார்கள் என்று அறிவித்தது, தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த எழுச்சியை, எம்.ஜி.ஆர் பிறந்த நாளுக்குப்பின் தமிழகம் வெளிப்படையாக காணும் என்று தீபா ஆதரவு தொண்டர்கள் மகிழ்ச்சியோடு கூறி வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அவரின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபாவை, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் ஆக்க வேண்டும் என, கட்சியின் நிர்வாகிகள் பலரும்; பெரும்பாலான தொண்டர்களும் விரும்பினர். ஆனால், அதை முறியடித்து, கட்சியின் அடிப்படை விதிகளில் சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு, பொதுக்குழு மூலம், சசிகலா, கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டு விட்டார்.
இல்லம் தேடி

இதனால், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்து, தீபாவை, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., பெயரில் தனி இயக்கம் காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், தினந்தோறும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க., தொண்டர்கள், தீபாவின் இல்லம் தேடி வருகின்றனர். அவர்கள், தங்கள் எண்ணங்களை நேரடியாகவே அவரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்களிடம், உங்கள் எண்ணங்களையெல்லாம் அறிந்து கொண்டேன்; என் எண்ணமும் அதுதான். விரைவில் அதற்கான ஏற்பாடுகளுடன், என் முடிவை அறிவிக்கிறேன் என்று சொல்லும் அவர், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களுக்கு விடை தெரிய வேண்டும் என்றும் பக்குவமாகப் பேசி, தொண்டர்களை அனுப்பி வருகிறார்.
அரசியலுக்கு வர வலியுறுத்தல்

இப்படி குவியும் தொண்டர்கள் ஒரு புறம் இருக்க, சேலம், திருச்சி, கரூர், ஈரோடும் அரியலூர், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர் என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தீபா பேரவை ஆரம்பித்து, உறுப்பினர் சேர்க்கையையும், அ.தி.மு.க.,வினர் துவங்கி விட்டனர். சேலத்தில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அ.தி.மு.க., என்ற பெயரில் புதிய இயக்கத்தையும் ஆரம்பித்து, கொடி, சின்னம் ஆகியவற்றையும் அறிவித்து விட்டனர். இந்த இயக்கம் தீபா தலைமை தாங்கி நடத்துவதற்காக துவங்கப்பட்ட இயக்கம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, அம்மா தி.மு.க., என்ற பெயரிலும், தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, கட்சி துவங்கப்பட்டுள்ளது.

இப்படி தன்னெழுச்சியாக, தீபாவுக்கு ஆதரவு வட்டம் பெருகுவதை, அ.தி.மு.க., நிர்வாகிகளாலும்; சசிகலா ஆதரவாளர்களாலும் பொறுக்க முடியவில்லை. தீபா குறித்து பல்வேறு விதமான செய்திகளை, முடிந்த மட்டும் வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பத் துவங்கி உள்ளனர். அப்படியொரு விஷயம்தான், தீபாவின் கணவர் பேட்ரிக். அவருக்காக தீபாவும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டார். அவர் தற்போது கிறிஸ்துவராகவே உள்ளார். அதனால்தான், அவர், நெற்றியில் பொட்டு வைப்பதில்லை. தீபாவை, இந்து இயக்கங்கள் தாங்கிப் பிடிக்க முயல்கின்றன. ஆனால், அவர் அதை விரும்பவில்லை. காரணம், அவர் கிறிஸ்தவர் என்பதுதான்.

அதுமட்டுமல்ல, அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அதனால்தான், கட்சித் துவக்கும் பணியிலோ, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க., தொண்டர்களை சந்திக்கும் நிகழ்வையோ தள்ளிப் போட்டு வருகிறார் என்றெல்லாம் தகவல் பரப்புகின்றனர்.
இது தொடர்பாக, தீபா கூறியதாவது:

நான் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறேன்; கிறிஸ்தவராக மாறி விட்டேன் என, இப்போது சொல்லவில்லை. என் அத்தை ஜெயலலிதா இறந்த சில நாட்களில், நான், அவர் மரணத்தில் ஒளிந்து கிடக்கும் மர்மம் விலக வேண்டும் என சொல்ல ஆரம்பித்த, சில நாட்களிலேயே இப்படி, செய்தி பரப்பத் துவங்கி விட்டார்கள். அதுவும், நான், கிறிஸ்மசுக்காக, டிவிட்டர் மூலம் வாழ்த்து செய்து பதிவிட்டதும், பார்த்தீர்களா… தீபா கிறிஸ்தவர்தான் என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும் என்றும் சொல்லத் துவங்கினார்கள்.

அப்போதே நான் சொன்னேன். நான், எல்லா மத பண்டிகைகளுக்கும், அந்த மதத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்த்து சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ரம்ஜான் நாளில், முஸ்லிம்களுக்கு வாழ்த்துச் சொன்னேன். உடனே, நான் முஸ்லிம் மதத்துக்கு மாறி விட்டேன் என சொல்ல முடியுமா? அரசியல் ரீதியில், நான், பலம் பெற்று விடக் கூடுமோ என்ற அச்சத்தில், சிலர் இப்படியெல்லாம் செய்தி பரப்புகின்றனர். அதிலெல்லாம் கவனம் செலுத்தி, அவர்களோடு மல்லுக்கட்டி, நேரத்தை வீணடிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் விருப்பத்தை, அந்த விஷயத்திலும் நான் நிறைவேற்ற மாட்டேன்.
பொய்யாக இட்டுக் கட்டுகின்றனர்.

என் கணவர் ஒரு கிறிஸ்தவர் என, இவர்களாக புதிய தகவல் சொல்கின்றனர். எதையோ ஒரு கதையை சொல்லிவிட்டு, அதற்கு, சப்போர்ட்டாக, சில விஷயங்களை பொய்யாக இட்டுக் கட்டுகின்றனர்.

நான் பொட்டு வைக்காதது, பெரிய குற்றமா என்ன? ஏற்கனவே, சிலர் என்னிடம் இது குறித்து சொன்னார்கள். இப்படிப்பட்ட விஷயங்களில் நான், தீவிர கவனம் செலுத்துவதில்லை. பொட்டு வைத்தால், இந்து. இல்லாவிட்டால், கிறிஸ்தவரா? இப்படியெல்லாம் சொல்லி, ஒரு மதத்துக்குள் என்னை யாரும் அடக்க முடியாது. நான் எல்லா மதத்துக்கும் பொதுவான பெண். எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களையும் நான் மதிக்கிறேன்; இதில், எங்கள் அத்தை மாதிரிதான் நானும்.

இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல; அனைத்து மத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் என்னை தொடர்ந்து சந்திக்கின்றனர். அவர்கள், நான், தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அப்படி நடந்தால், நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவோம் என்றும் கூறுகின்றனர். எது நல்லதோ, அதை கட்டாயம் செய்வேன் என்றுதான், அவர்களிடம் சொல்லி அனுப்புகிறேன்.

மற்றபடி, இந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டுமோ, அதை தீவிரமாக ஆராய்ந்து; யோசித்துதான் செய்வேன். யாருக்காவும் அவசரப்பட்டெல்லாம் எதையும் செய்ய மாட்டேன். மற்றபடி, என் குடும்ப விஷயமெல்லாம், வெளியில் இருப்பவர்களுக்குத் தேவையில்லை.

என்னை சந்திக்க வரும் தொண்டர்களை சிலர் மிரட்டுவதாக அறிகிறேன். மிரட்டியெல்லாம் யாரும் யாரையும் பணிய வைக்க முடியாது. நடப்பது, நல்லவிதமாக நடந்தே தீரும்.

இவ்வாறு அவர் கூறினார்

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media