‘முதல்வர் பதவி, மந்திரி சபை பட்டியல்’ என ஆளுநரிடம் போனால், விளைவு உங்களுக்குத்தான் சசியை எச்சரித்த ஓ.பி.எஸ்

January 11, 2017 1:56 pm
‘முதல்வர் பதவி, மந்திரி சபை பட்டியல்’ என ஆளுநரிடம் போனால், விளைவு உங்களுக்குத்தான் சசியை எச்சரித்த ஓ.பி.எஸ்

அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா அடுத்து முதல்வர் நாற்காலியில் அமர துடித்துக்கொண்டிருப்பது அவரின் நடவடிக்கைகள் நன்கு உணர்த்துகிறது. அமைச்சர்கள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்பட கட்சியின் சீனியர்கள் அனைவரும் ஒரே குரலில், ‘முதல்வர் பதவியில் சசிகலா அமர வேண்டும் என துதி பாடுவதும். பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும்’ எனப் பேசுவது அதிமுகவில் நடக்கும் அக்கப்போர். இவர்களின் கூவலுக்கு கொஞ்சமும் அசையாத பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து எந்த அசைவுகளும் இல்லை.

தனக்கு கீழ் இருந்து கும்பிடு போட்ட பன்னீர், நம்மிடமே எஜமானன் போல் செயல்படுவதா?’ எனக் கோபத்தைக் காட்ட ஆரம்பித்தார் சசிகலா. மீனவர் பிரச்னை உள்பட தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னைகள் குறித்து பிரதமருக்குக் கடிதம் எழுதினார் பன்னீர்செல்வம். அதே கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து சசிகலாவும் அனுப்பியிருக்கிறார். ஆட்சியில் இருந்தும் கட்சியில் இருந்தும் ஒரே கோரிக்கைக்காக இரண்டு பேர் கடிதம் எழுதியதை அதிமுகவினர் கைகொட்டி சிரிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது. “அதிகாரத்தில் இருந்து விலகும் முடிவில் பன்னீர்செல்வம் இல்லை என்பதை உணர்த்த சசிகலா நேரடியாகவே எதிர்ப்பை வெளிக்காட்டினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இந்தியா டுடே மாநாட்டில் பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருக்கும்போதே மேடையில் இருந்து கொஞ்சம் கூட நாகரிகமே இல்லாமல் வெளியேறினார். ‘பொங்கலுக்குள் முதல்வர் ஆகிவிட வேண்டும்’ என்ற அவருடைய திட்டமும் கை நழுவிவிட்டது. ‘அவர் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்?’ என உளவுத்துறையின் உயர் அதிகாரி மூலம் தூது அனுப்பினாராம் சசி. நேற்று அந்த அதிகாரியிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ்” டீடெய்லாக பேசினாராம்.

அதிகாரியிடம் பன்னீர்செல்வம் நீண்ட நேரம் நடந்த விவாதத்தில் இருந்தாராம், தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து கலங்கிய கண்களோடு விவரித்திருக்கிறார். ‘கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டுத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். அரசின் கொள்கை முடிவுகளை கார்டன் ஆலோசனையின்படியே எடுத்து வருகிறோம். பாடநூல் கழகத் தலைவர் பதவிக்கு வளர்மதி பெயரை சின்னம்மா முன்மொழிந்தார். உடனே பதவியை வழங்கினோம். ‘முதல்வர் பதவியில் இருந்து நான் விலக வேண்டும்’ என்று அவர்கள் வற்புறுத்துகின்றனர். இந்தப் பதவியில் நான் இருப்பதால்தான், அதிகாரம் சீராகச் சென்று கொண்டிருக்கிறது.

மத்திய அரசுக்கு இணக்கமாக நடந்து கொண்டு பல திட்டங்களைக் கொண்டு வர முடிகிறது.முதல்வராக சின்னம்மா வந்துவிட்டால், இருக்கும் மொத்த அதிகாரத்தையும் பறித்துவிடுவார்கள். கோட்டையில் நடக்கும் விவகாரங்களை ஆளுநர் கவனித்துக் கொண்டு வருகிறார். அதிகாரத்துக்குள் குழப்பம் வந்துவிட்டால், ஆட்சி கைவிட்டுப் போய்விடும். நமக்கு அடுத்தபடியாக இருக்கும் தி.மு.கவுக்கு போய்விடும்.

இதை உறுதிபடுத்தும் விதமாக தி.மு.க தலைவருக்கும், ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததையும் வைத்தே புரிந்துகொள்ளுங்கள். குடியரசு தினத்தில் என்னைக் கொடியேற்றுமாறு ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார் அதற்குள் நீங்கள், ‘முதல்வர் பதவி; மந்திரி சபை பட்டியல்’ என ஆளுநரிடம் போய் நின்றால், விளைவுகள் நமக்குதான். அனைவரையும் அரவணைத்துக் கொண்டு ஆட்சியை செலுத்திக் கொண்டிருக்கிறேன். எதார்த்த நிலைகளை தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள். இதையும் தாண்டி நீங்கள் வருவதாக இருந்தால், அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன்.

நான் எந்த மாதிரியான சூழலில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை நேரில் அமர்ந்து பார்த்துக் கொள்ளுங்கள் என சசிகலாவிடம் தெரிவிக்க வேண்டிய தகவல்களைக் கூறியிருக்கிறார் ஓ.பி.எஸ். இந்தத் தகவல்களை கார்டன் வட்டாரத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறாராம் அதிகாரி.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media