சொத்துக் குவிப்பு வழக்கு, ஜெ. ‘மரண’ விசாரணை; பீதியில் சசிகலா & மாஃபியா கோஷ்டி!

January 12, 2017 12:22 pm
சொத்துக் குவிப்பு வழக்கு, ஜெ. ‘மரண’ விசாரணை; பீதியில் சசிகலா & மாஃபியா கோஷ்டி!

ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அவசர அவசரமாக அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நடராஜன், ஆட்சியில் அமர போராடி வருகிறார். இதற்கிடையே பல்வேறு இன்னல்கள் அதாவது அதிருப்தியாளர்களை சமாளிப்பது, தனக்கு எதிராக போர்க்கொடி தூக்குவோரை துட்டு கொடுத்து வளைப்பது என ரொம்ப பிஸியாகவும் இருந்து வருகிறார் சின்னம்மா என்கிற சசிகலா.

தற்போது முதல்வராக பதவியேற்க அமைச்சர்கள் பட்டியலுடன் காத்திருக்கும் நிலையில் கொஞ்சம் பீதியில் உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல், 6 மாதங்களுக்கு முன்பே ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். அதற்குப் பிறகு ஜெ. உடல்நிலை, மரணம் மற்றும் சில காரணங்களால் அதில் தீர்ப்பு வெளியாகாமலேயே இருந்தது.

ஆனால், தற்போது உச்ச நீதிமன்ற வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்கள் இந்த (ஜனவரி) மாதத்துக்குள்ளாகவே தீர்ப்பு வெளியாகும் என்று உறுதி செய்கின்றன. சுப்பிரமணியன் சுவாமியும் இதையே சொல்லியிருக்கிறார். வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகத்தான் வரும் என்று சசிகலா தரப்பு உறுதியாக நம்புகிறது.

ஆனால், நீதித்துறைக்கு நெருக்கமான டெல்லி வட்டாரங்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சசிகலாவின் அரசியல் வாழ்க்கைக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று தெரிவித்திருக்கின்றன. கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, ‘ஜெயலலிதாவின் மரணம் எந்த வகையிலும் தீர்ப்பை பாதிக்காது. வாதங்கள் எல்லாம் முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் நேரத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இறந்தாலும், வழக்கம் போல தீர்ப்பைத் தந்த முன்னுதாரணங்கள் பல உள்ளன’ எனக் கூறியிருக்கிறார்.

எது எப்படியோ… தீர்ப்புக்குப் பிறகே தங்களுடைய அடுத்த அடியை எடுத்துவைக்கலாம் என்றே சசி தரப்பும் யோசிக்கிறது. அதனால்தான், முதலில் 12-ம் தேதி முதல்வர் பொறுப்பேற்பதாக முடிவுசெய்து வைத்திருந்ததைத் தற்போது, மேலும் சில நாட்களுக்குத் தள்ளி வைத்துள்ளனர்.

பொங்கல் அன்று பதவி ஏற்கலாம் என்கிறது ஒரு தரப்பு. பொங்கல் முடிந்தபிறகு எம்.ஜி.ஆர் பிறந்தநாளின் போதோ, அதற்கு மறுநாளோ இருக்கலாம் என்கிறது இன்னொரு தரப்பு. சசிகலா உடனடியாகப் பதவி ஏற்பதில் அவரது குடும்பத்துக்குள்ளேயே மாறுபட்ட கருத்துகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சசிகலா உடனடியாக முதல்வர் ஆக வேண்டும் என்கிறாராம் நடராசன். கொஞ்சம் காத்திருந்து அப்புறம் ஆகலாம் என்கிறாராம் திவாகரன். ‘சசிகலா உடனடியாக முதல்வர் ஆகி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் பதவி விலக வேண்டிய இருந்தால் பெரும் பின்னடைவு ஏற்படும்’ என்று இந்தத் தரப்பு சொல்கிறதாம். இது சசிகலாவைக் குழப்பம் அடைய வைத்துள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சசிகலா புஷ்பா எம்.பி., மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் கொடுத்தார். இந்த மனுவை விசாரிக்க சி.பி.ஐ-க்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி இருக்கிறது. ‘ஜெயலலிதா மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்’ எனத் தொடர்ந்து சொல்லி வந்த சசிகலா புஷ்பா, இதே கோரிக்கையுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து வந்தார். சி.பி.ஐ-க்கு மத்திய உள்துறை அமைச்சகம் இதை அனுப்பும் என்று சசிகலா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இது சசிகலாவை அச்சத்தில் உறையவைத்துள்ளது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media