நாளை காலை 11.30 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்கிறார் வீ.கே சசிகலா

December 30, 2016 11:20 am
நாளை காலை 11.30 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்கிறார் வீ.கே சசிகலா

சென்னை: சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த, ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதேநேரம், அதிகாரம்மிக்க, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு, ஜெயலலிதாவின் தோழியை தேர்ந்தெடுக்க கட்சியினர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டது. அக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா பெயரை முன்மொழிந்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான சீனியர்கள் போயஸ் இல்லத்திற்கு சென்று சசிகலாவிடம் அளித்து அவரது ஒப்புதலை கேட்டனர்.

சிறிது நேர தாமதத்திற்கு பிறகு, புதிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்க சசிகலாவும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், கட்சியின் எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்திற்கு இன்று அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தில் இன்று மாலை எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

இப்படி பல திருப்பங்கள், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிமுக புதிய பொதுச்செயலாளராக சசிகலா நாளை பதவி ஏற்க இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக கட்சி அலுவலகத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

அதிமுக புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்க இருக்கும் சசிகலா இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்க இருப்பதால் ராயப்பேட்டை கட்சி அலுவலகம் மீண்டும் உற்சாகம் அடைய தொடங்கி இருக்கிறது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media