ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் தீபாவை ஆதரிக்க முடிவு: சிக்கலில் திமுக

January 12, 2017 9:00 am
ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் தீபாவை ஆதரிக்க முடிவு: சிக்கலில் திமுக

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, அக்கட்சியின் பொருளாளரும், அவரது மகனுமான ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப் பட்டார்.

இது, அக்கட்சியில் உள்ள சில முக்கிய பொறுப்பாளர்களுக்கும், பல தொண்டர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டாலினுக்குப் பிடிக்காதவர்கள், ஸ்டாலினை பிடிக்காதவர்கள் என்ற இரு தரப்பும், கருணாநிதியின் தலைமைக்கு கட்டுப்பட்டு இதுவரை அடக்கி வாசித்து வந்தது.

ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. ஸ்டாலின் மீதான வெறுப்பு தற்போது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்து விட்டது.

திமுக தலைவர் தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்களின் மன நிலையை அறிந்தவர். அவருடைய அணுகுமுறையும் தொண்டர்களை உற்சாகப் படுத்துவதாக இருக்கும்.

ஆனால் ஸ்டாலின் அப்படிப் பட்டவர் அல்ல. தனக்கு வேண்டப்பட்ட ஒரு வளையத்தை உருவாக்கிக் கொண்டு, மற்றவர்களை தவிர்த்து வருவதை கட்சி தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை.

மேலும், அவரது மருமகன் சபரீசனின் தலையீட்டை தொண்டர்கள் பலரும் கடுமையாக வெறுத்து வருகின்றனர்.

இது தவிர, கருணாநிதியால் மதிக்கப்பட்ட மூத்த தலைவர்கள் பலரும் ஓரம் கட்டப்பட்டு, ஒரு புதிய வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார் ஸ்டாலின்.

குறிப்பாக, அதிமுக மற்றும் மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்களே அதில் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர்.

மற்றொரு பக்கம், ஸ்டாலினை விரும்பாத கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இதுவரை அழகிரி மற்றும் கனிமொழியின் ஆதரவாளர்களாக இருந்து வந்தனர்.

இந்நிலையில், திமுக வில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அதிகரித்த கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே, அழகிரி மற்றும் கனிமொழி ஆதரவாளர்கள் ஓரம் கட்டப்பட்டனர்.

தற்போது, ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது அதிகாரம் கட்சியில் உச்ச நிலையை அடைந்துள்ளது.

இதனால், இனி தமக்கு திமுக வில் தமக்கு முக்கியத்துவமும் இல்லை, எதிர்காலமும் இல்லை என்று உணர்ந்த ஸ்டாலின் அதிருப்தியாளர்கள், மாற்று வழி குறித்து யோசித்து வந்தனர்.

இந்நிலையில், சசிகலாவுக்கு எதிராக களம் இறங்கி உள்ள தீபாவுடன் இணைய அவர்கள் முடிவு செய்து, முக்கிய தலைவர்கள் மூலம் பேச்சு வார்த்தை நடை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இதை அறிந்த, திமுக தலைமை அதிருப்தியாளர்களை சமாதானப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் அது எதிர்பார்த்த அளவு பலன் தராது என்றே திமுக அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஸ்டாலின் எதிப்பாளர்களின் இந்த முடிவு, தீபாவின் ஆதரவாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

அதே சமயம், உறு மீன் வரும் வரையில் வாடி இருக்குமாம் கொக்கு என்ற பாணியில், அழகிரியும், கனிமொழியும் பொறுமை காத்து வருகின்றனர்.

இதை எல்லாம் பார்க்கும்போது, உத்திரப்பிரதேசத்தில் பிரச்சினை வரும் போதெல்லாம், தமிழ்நாட்டில் திமுகவுக்கு சிக்கல் வரும் என்று கணிக்கும் சென்னையின் பிரபலமான ஜோதிடர் ஒருவரின் கூற்றுதான் நினைவுக்கு வருகிறது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media