ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் வேண்டும்; மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைத்த அ.தி.மு.க. எம்.பி.க்கள்!

January 11, 2017 8:14 am
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் வேண்டும்; மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைத்த அ.தி.மு.க. எம்.பி.க்கள்!

தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களும் குரல் கொடுத்துவருகின்றனர்.

அவ்வகையில், மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி அனில் மாதவ் தவேவை சந்தித்து, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கும்படி வலியுறுத்தினர்.

மேலும் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது. தமிழர்களின் உணர்வுகள் மற்றும் பாரம்பரியத்துக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்றும், இதற்காக அவசர சட்டம் உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து மத்திய மந்திரி மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய மத்திய மந்திரி, ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும், அதன்பிறகே இதுபற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.

தம்பிதுரை பேசும்போது, ‘ஜல்லிக்கட்டு நடத்துவதன் மூலம் தமிழக கலாச்சாரம் பாதுகாக்கப்படும். வலிமைமிக்க காளைகளை உற்பத்தி செய்து, நாம் கடவுளாக மதிக்கும் கால்நடைகளுக்காக இவ்விழா கொண்டாடப்படுகிறது. இதில் காளைகள் துன்புறுத்தப்படவில்லை என்றும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டத்தை உடனே கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியிருக்கின்றோம். ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வரப்பட்டால் இளைஞர்கள் மகிழ்வார்கள்’ என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு , சசிகலா மற்றும் முதல்வர் பன்னிர்செல்வம் கடிதம் எழுதியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media