பெண், கூலி தொழிலாளி வங்கி கணக்கில் ரூ.1½ கோடி : கருப்பு பணமா?: அதிகாரிகள் விளக்கமளிக்க மறுப்பு..!!

December 19, 2016 7:07 am
பெண், கூலி தொழிலாளி  வங்கி கணக்கில்  ரூ.1½ கோடி : கருப்பு பணமா?: அதிகாரிகள் விளக்கமளிக்க மறுப்பு..!!

தேனி : தேனி அருகே உள்ள நாகலாபுரம் கிழக்குத் தெருவில் வசித்து வருபவர் சடையதேவர் மனைவி முனியம்மாள் (வயது 60). கணவரை இழந்த இவர் முதியோர் உதவித் தொகை பெற்று வருகிறார். மேலும் 100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பயனாளியாகவும் உள்ளார். இந்த பணத்தை பெறுவதற்காக தேனியில் உள்ள கனரா வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.

கடந்த 5-ந் தேதி முதியோர் உதவித் தொகை பெறுவதற்காக முனியம்மாள் வங்கிக்கு சென்றார். அப்போதுதான் அவரது வங்கி கணக்கில் அவருக்கே தெரியாமல் ரூ.1 கோடியே 50 லட்சத்து 50 ஆயிரம் வரை பண பரிவர்த்தனை செய்திருப்பது தெரிய வந்தது.இது குறித்து முனியம்மாள் வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் உரிய பதில் தெரிவிக்கவில்லை. அவரது பாஸ்புத்தகத்தில் ரூ.1½ கோடி பதிவு செய்யப்பட்டு இருந்ததை அடித்தல் செய்து கொடுத்து விட்டனர்.

உதவித் தொகை மற்றும் வேலை உறுதியளிப்பு திட்ட சம்பளம் பெறுவதற்காக தொடங்கி இருந்த எனது வங்கி கணக்கில் கடந்த மார்ச் 15-ந் தேதி ரூ.50 லட்சம் வரவு வைக்கப்பட்டு அதே தேதியில் அந்த தொகை பற்று வைத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் மார்ச் 28-ந் தேதி ரூ.1 கோடி வரவு வைக்கப்பட்டு மார்ச் 30-ந் தேதி அந்த தொகை முழுவதும் பற்று வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 22-ந் தேதி ரூ.53 ஆயிரம் வரவு வைக்கப்பட்டு அதன் பின் ரூ. 50 ஆயிரம் பற்று வைக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி நடந்திருப்பது இப்போதுதான் எனக்கு தெரிய வந்தது. இது குறித்து விளக்கம் கேட்ட போது வங்கி அதிகாரிகள் முறையான பதில் தெரிவிக்கவில்லை. இதனால் எனது மகன்கள் மூலம் தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

வேறு கணக்கிற்கு செலுத்த வேண்டிய பணம் இவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டதா? அல்லது கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் இவரது கணக்கில் போட்டு மாற்றினார்களா? என்று தெரியவில்லை. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த மாதம்தான் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னரே இந்த பண பரிமாற்றம் நடந்துள்ளதால் அது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media