ஜெயலலிதா சொத்துக்களை அரசுடைமையாக்க கோரிய மனு தள்ளுபடி

ஜெயலலிதா சொத்துக்களை அரசுடைமையாக்க கோரிய மனு தள்ளுபடி

ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமையாக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை மதுரை உயர்நீதி மன்ற கிளை இன்று தள்ளுபடி செய்துள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில்,முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா, ஏராளமான சினிமாவில் நடித்து பல கோடி ரூபாய் சம்பாதித்தார். அவர், கடந்த டிசம்பர் மாதம் 5-ந்தேதி இறந்தார்.

கடந்த ஆண்டு, மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் போட்டியிட்டபோது, அவரது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்தார்.

இதுதவிர தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் அவருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் உள்ளன.

அந்த சொத்துகளை தனக்கு பின் யார் நிர்வகிப்பார்கள் என்பது தொடர்பாக அவர் எதுவும் குறிப்பிடவில்லை. அவருக்கு நேரடி வாரிசும் இல்லை.

எனவே, ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, ஜெயலலிதாவின் சொத்துகளை கண்டறிந்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

அந்த அறிக்கையின்படி அவருடைய சொத்துகளை அரசுடைமையாக்க வேண்டும்.

பின்னர் அந்த சொத்துகளை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு நிர்வகித்து, சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஏழைகளுக்கு செலவிட உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கோரி இருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனிநபர் சொத்துக்கள் தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்ய முடியாது என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares