ஜெயலலிதா சொத்துகளை அரசுடைமை ஆக்க கோரும் மனு: மதுரை உயர் நீதி மன்றத்தில் இன்று விசாரணை

January 12, 2017 4:11 am
ஜெயலலிதா சொத்துகளை அரசுடைமை ஆக்க கோரும் மனு: மதுரை உயர் நீதி மன்றத்தில் இன்று விசாரணை

ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமையாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஏராளமான சினிமாவில் நடித்து பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் போட்டியிட்டபோது, அவரது சொத்துக்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் அவருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் உள்ளன.

அந்த சொத்துகளை தனக்கு பின் யார் நிர்வகிப்பார்கள் என்பது தொடர்பாக அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

அவருக்கு நேரடி வாரிசு யாரும் இல்லாத நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 5 ம் தேதி காலமானார்..

எனவே, ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, ஜெயலலிதாவின் சொத்துகளை கண்டறிந்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், அவருடைய சொத்துகளை அரசுடைமையாக்க வேண்டும்,

மேலும் அந்த சொத்துகளை ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் குழு நிர்வகித்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஏழைகளுக்கு செலவிட உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து அந்த மனு மதுரை உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media