காளைகளுக்கு உணவு போட்டு அவற்றை துன்புறுத்தலாமா? – ராதா ராஜன் தெனாவட்டு!

January 12, 2017 7:34 am
காளைகளுக்கு உணவு போட்டு அவற்றை துன்புறுத்தலாமா? – ராதா ராஜன் தெனாவட்டு!

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டே நாட்கள் u உள்ள நிலையில், ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டனர்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இவ்விகாரத்தில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது தெரிவித்தனர். இவ்வழக்கில் தற்போது தான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கல் பண்டிகைக்குள் தீர்ப்பு வழங்க இயலாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அரசியல் கட்சித்தலைவர்கள், நடிகர்கள் என பலரும் கருத்து கூறி வருகின்றனர். இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

நான் இதை எதிர்பார்த்தேன். உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் எப்போது தீர்ப்பு வழங்குமோ அப்போதுதான் வழங்கும். உச்சநீதிமன்றத்தை யாரும் வற்புறுத்த முடியாது. வற்புறுத்தவும் கூடாது. ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன. இதை பார்த்துதான் விலங்குகள் நல ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். நாங்களும் மாடுகளுடன் வளர்ந்தவர்கள்தான். எங்களுக்கும் மாடுகளைப் பற்றி தெரியும் என்றார்.

காளைகளுக்கு உணவு போட்டு அவற்றை துன்புறுத்தலாமா? ஜல்லிக்கட்டு வேண்டும் என்று கூறுவதற்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ அதே போல எங்களுக்கும் ஜல்லிக்கட்டு வேண்டாம் என்று கூற உரிமையிருக்கிறது என்றும் ராதா ராஜன் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு போட்டியை சட்டப்பூர்வமாக நடத்த வேண்டும். சட்டத்தை மீறி நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்று ராதா ராஜன் கூறினார். இந்தியாவில்தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வெளிநாட்டில் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு வழக்கு போடவில்லை. எங்களுக்கும் பண்பாடு கலாச்சாரம் பற்றி தெரியும் என்றும் விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் கூறியுள்ளார்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media