கறுப்புப் பணத்திற்கு சம்பந்தமில்லாத ஏழை மக்களே துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்; ஸ்டாலின் பேட்டி

November 24, 2016 1:32 pm
கறுப்புப் பணத்திற்கு சம்பந்தமில்லாத ஏழை மக்களே துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்; ஸ்டாலின் பேட்டி

’மக்கள் என் பக்கம்’ என்று அதிமுக அரசு சொன்னாலும், மக்கள் வங்கிகள் பக்கம் கால் கடுக்க நிற்கும் நிலைதான் உள்ளது” ”500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வந்த பின்பும் கறுப்புப் பணத்திற்கு சம்பந்தமில்லாத ஏழை மக்கள் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனரே தவிர கறுப்புப் பணத்திற்கு காரணமாக இருக்கக் கூடியவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்” என – தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகப் பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், ’500 ரூபாய் – 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என அறிவித்து பொதுமக்களை வங்கிகள் முன் நீண்ட வரிசைகளில் நிற்கச் செய்து, வாட்டி வதைக்கும் மத்திய – மாநில அரசுகளை கண்டித்து, சென்னை, கொளத்தூர் தொகுதியில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கழகத் தோழர்களின் கையோடு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கை கோர்த்தபடி நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த போராட்டமானது, தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது சொந்தப் பணத்தை பெறுவதற்கு தினசரி வங்கிகளின் முன் பல நாட்களாக, பல மணி நேரங்களுக்கு வரிசை, வரிசையாக நின்று காத்திருப்பதை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்திருந்தது. கொளத்தூர் தொகுதி முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள், தாய்மார்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் திரளாகப் பங்கேற்று, மத்திய, மாநில அரசுகளுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

முன்னதாக, புரசைவாக்கத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கி வைத்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், அங்கிருந்து கொளத்தூர் தொகுதி முழுவதுமுள்ள முக்கிய பகுதிகள், சாலைகள் வழியாக திறந்த ஆட்டோவில் நின்றபடி பயணித்து, மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற பலாயிரக்கணக்கான தொண்டர்களையும், பொதுமக்களையும் பார்வையிட்டு உற்சாகப்படுத்தினார். அவரைக் கண்டதும் பெரும் உற்சாகமடைந்து சாலைகளின் இருமருங்கிலும் அணி அணியாகத் திரண்ட பொதுமக்கள் பலத்த கரகோஷத்துடனும், உற்சாகத்துடனும் கையசைத்து வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு;

மு.க.ஸ்டாலின்: தலைவர் கலைஞர் அவர்களின் ஆணைக்கிணங்க திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் மிகப்பெரிய மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

இந்த மனிதச் சங்கிலி போராட்டமானது, மத்திய அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய, குறிப்பாக பிரதமர் அவர்களால் கறுப்புப் பணத்தை ஒழிக்கக் கொண்டு வரப்பட்ட திட்டத்தின் நோக்கத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டமல்ல. இந்த போராட்டத்தை பொறுத்தவரையில், கறுப்புப் பணத்தை ஒழிக்கின்ற அதேவேளையில், அன்றாடம் காய்ச்சிகளுக்கு, அன்றாடம் பிழைப்பு நடத்தக்கூடிய சிறு, சிறு வணிகர்கள், நடுத்தர மக்கள், வியாபாரிகளுக்கு மிகப்பெரிய தொல்லைகளும், துன்பங்களும், கொடுமைகளும் ஏற்பட்டு இருக்கிறது.

எனவே, அதை கண்டிக்கக் கூடிய வகையில் தான் இந்த மனித சங்கிலி போராட்டத்தை திராவிட முன்னேற்ற கழகம் நடத்தியிருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொண்டாக வேண்டும்.
”மக்கள் என் பக்கம், என் பக்கம்”, என்று இன்றைக்கு மத்தியில் இருக்கக்கூடிய அரசும் சொல்லலாம்.

அதேபோல இந்த பிரச்சனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கக்கூடிய தமிழகத்தை ஆளுகின்ற தமிழக அரசும் சொல்லலாம், ஆனால், இன்றைக்கு மக்கள் வங்கிகள் பக்கம் போய் கால்கடுக்க நின்று கொண்டிருக்கின்ற கொடுமைதான் ஏற்பட்டு இருக்கிறது.

எனவே, இந்த நிலையை உடனடியாக சரி செய்திட வேண்டும். குறிப்பாக, ஐநூறு ரூபாய் நோட்டுகளும், ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் செல்லாது என்று அறிவித்து, அதற்கு பதிலாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்று அறிவித்திருந்தாலும், அந்த இரண்டாயிரம் ரூபாய்க்கு வங்கிகள் சில்லறை தரமுடியாத ஒரு நிலை நீடிக்கிறது.

அதுமட்டுமல்ல, 500 ரூபாய் நோட்டுகளையும், 1000 ரூபாய் நோட்டுகளையும் வங்கிகளுக்கு எடுத்துச் சென்று மாற்றுகின்ற சூழ்நிலையில் அந்த வங்கிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கியூ வரிசையில் நிற்கும் கொடுமையும் ஏற்பட்டு இருக்கிறது.
ஆகவே, மத்திய அரசு நூறு என்ன செய்திருக்க வேண்டுமென்று சொன்னால், ரூபாய் நோட்டுகளையும், ஐந்நூறு ரூபாய் நோட்டுகளையும் புதிதாக, அதை அதிகளவில் புழக்கமடையக்கூடிய வகையில் செய்திருந்து, இந்த திட்டத்தை செயல்படுத்துகின்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தால், இவ்வளவு சங்கடங்கள் நிச்சயம் வந்திருக்காது.

எனவே, கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டிருந்தாலும், கறுப்புப் பணத்திற்கு காரணமாக இருக்கக் கூடியவர்கள் இன்றைக்கு நிம்மதியாக இருக்கிறார்கள். ஆனால், கறுப்புப் பணத்திற்கு சம்பந்தமில்லாமல் இருக்கும் பல ஏழை மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

எனவே, இதுகுறித்து பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் பாராளுமன்றத்திலும், அதேபோல மாநிலங்களவையிலும் பொது வாக்கெடுப்பு நடத்தி, இதுபற்றி பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: வரும் 28-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று தலைவர் அறிக்கை விட்டு இருக்கிறாரே ?

மு.க.ஸ்டாலின்: 28-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள போராட்டமானது திமுக அறிவித்த போராட்டமில்லை என்றாலும், மத்திய அளவில் இருக்கக்கூடிய, இந்திய அளவில் இருக்கக்கூடிய எல்லா எதிர்க்கட்சிகளும் இணைந்து நடத்தக் கூடிய போராட்டம். அந்த போராட்டத்திற்கு திமுகவும் துணை நிற்கும் என்ற வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் எதிரில் அந்த போராட்டம் நடைபெறும் என்று தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அறிவித்து உள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media