பாகிஸ்தானுக்கு ரூ.2,600 கோடி நிதி உதவி…அமெரிக்க பாராளுமன்றம் நிபந்தனை..!

December 10, 2016 6:06 am
பாகிஸ்தானுக்கு ரூ.2,600 கோடி நிதி உதவி…அமெரிக்க பாராளுமன்றம் நிபந்தனை..!

வாஷிங்டன்: ஹக்கானி பயங்கரவாத குழு மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கு ரூ.2,600 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று அமெரிக்க பாராளுமன்றம் நிபந்தனை விதித்து உள்ளது.

கூட்டணி நாடுகள் ஆதரவு நிதி மூலம் அமெரிக்க அரசு பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடும் நாடுகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இதற்காக 900 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 5,900 கோடி ரூபாய்) ஆண்டு தோறும் ஒதுக்கி வருகிறது. இந்த நிதியின் கீழ் 2017-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.2,650 கோடி) வழங்கப்படவேண்டும்.ஆனால் அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் ஹக்கானி வலைப்பின்னல் என்னும் பயங்கரவாத குழுவுக்கு பாகிஸ்தான் தனது எல்லைப் பகுதியில் புகலிடம் அளித்து வருவதாகவும், அமெரிக்க நலன்களுக்கு எதிராக இக்குழு செயல்படுவதால் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்கக் கூடாது என்றும் அமெரிக்க எம்.பி.க்கள் கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த வாரம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையான கீழ்சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீது எம்.பி.க்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஹக்கானி வலைப்பின்னல் குழுவுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்கக் கூடாது என 375 பேரும், வழங்கலாம் என 34 பேரும் வாக்களித்து இருந்தனர்.இந்த தீர்மானத்தின் மீது அமெரிக்க மேல்-சபையான செனட்டில் நேற்று முன்தினம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பாகிஸ்தானுக்கு எதிராக 92 பேரும், ஆதரவாக 7 பேரும் வாக்களித்தனர். இதனால் செனட் சபையிலும் பாகிஸ்தானுக்கு சாதகமான முடிவு அமையவில்லை.

அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் பாகிஸ்தானுக்கு எதிரான முடிவை பெரும்பான்மையான எம்.பி.க்கள் எடுத்து இருப்பதால் இனி ஹக்கானி வலைப்பின்னல் குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை பாகிஸ்தான் நிரூபித்தால் மட்டுமே அந்த நாட்டுக்கு பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நிதி உதவி கிடைக்கும்.2017-ம் ஆண்டு அமெரிக்க தேசிய ராணுவ அங்கீகார சட்டத்தின் கீழ், அந்நாட்டின் ராணுவ மந்திரி பாராளுமன்றத்தில் பாகிஸ்தானுக்கான ராணுவ ஒத்துழைப்பு உறுதிச் சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும். தற்போதைய நிலையில் இது சாத்தியமில்லை.

அமெரிக்க பாராளுமன்றம் நிறைவேற்றிய இந்த தீர்மானம் ஒப்புதலுக்காக ஜனாதிபதி ஒபாமா கையெழுத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதில் அவர் கையெழுத்து போட்டு விட்டால் அது சட்டமாகி விடும். இதனால் 2017-ம் ஆண்டு இறுதி வரை பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானுக்கு நிதி உதவி கிடைக்காது.இந்த ஆண்டும் (2016) அமெரிக்க ராணுவ மந்திரி ஆஷ்டன் கார்ட்டர், இதேபோன்று உறுதிச் சான்றிதழை பாகிஸ்தானுக்கு அளிக்கவில்லை. இதனால் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அமெரிக்க நிதி உதவி பாகிஸ்தானுக்கு கிடைக்காமல் போனது நினைவு

நிதி உதவி அளிப்பதில் பாகிஸ்தானுக்கு அமெரிக்க பாராளுமன்றம் விதித்துள்ள 4 முக்கிய நிபந்தனைகள் வருமாறு:-

1. ஹக்கானி வலைப்பின்னல் குழுவின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது. 2. பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் ஹக்கானி குழுவிற்கு அடைக்கலம் தரக்கூடாது. 3. பாகிஸ்தானில் செயல்படும் இக்குழுவின் தலைவர்கள், ஆதரவாளர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். 4. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஆப்கானிஸ்தானுடன் இணைந்து செயல்படவேண்டும்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media