”உக்ரைன் நாட்டுக்கு பரவிய ஜல்லிக்கட்டு எழுச்சி”

January 10, 2017 11:04 am
”உக்ரைன் நாட்டுக்கு பரவிய ஜல்லிக்கட்டு எழுச்சி”

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களும் ஆதரவு தெரிவித்து வீதிக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் நாட்டின் உஸ்கொரோட் தேசிய மருத்துவக் கல்லூரியில் பயிலும் தமிழக மாணவர்கள் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தியுள்ள போராட்டம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இந்த அளவுக்கு எழுச்சி ஏற்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின்னர்தான் இந்தியா என்ற ஒரு ஒருங்கிணைந்த நாடும், வரைபடமும் உருவானது.

ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய உலகின் மூத்தக் குடி என்ற பெருமையும், பாரம்பரியமும் தமிழினத்திற்கு மட்டுமே உண்டு. இத்தகைய சிறப்பு மிக்க தமிழ் இனத்தின், பல்லாயிரம் ஆண்டு கால அடையாளங்களில் ஒன்று ஜல்லிக்கட்டு.  காளையின் திமிலைப் பிடிக்கும் தைரியம் உலகிலேயே தமிழனுக்கு மட்டுமே உண்டு என்பதை உலகிற்குப் பறைசாற்றிய பாரம்பரிய விளையாட்டாகவும் ஜல்லிக்கட்டு விளங்கியது.

ஆனால், ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப் படுவதாக, சில அமைப்புகள் புகார் அளித்ததை அடுத்து, கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்க வலியுறுத்தி தமிழ் நாட்டின் பெரும்பாலான அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன.

இதன் உச்சகட்டமாக, கடந்த ஞாயிற்று கிழமை தன்னெழுச்சியாய் கூடிய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், சென்னை மெரினா கடற்கரையில் நடத்திய பேரணி ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது. அதையடுத்து மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு பேரணியில் அந்த நகரமே குலுங்கியது.

தமிழ் திரை உலகம் இதுவரை பெரிய அளவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாய் திறக்காத நிலையில், பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜ மௌலி ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இந்த எழுச்சி, நாட்டின் மற்ற மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் நாட்டின் உஸ்கொரோட தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களான, குடியரசு மணி, ரவி குமார், அணு சங்கரன், விக்னேஷ், திவ்யா உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் ஒன்றிணைந்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து கல்வி பயிலும் ஏராளமான மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

 

 

 

 

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media