என்ன ஆச்சு?பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள்கள்!

January 4, 2017 10:54 am
என்ன ஆச்சு?பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள்கள்!

சென்னை: பள்ளிக்கூடம் திறந்த உடன் மாணவர்களுக்கு சைக்கிள்கள், புத்தகப்பைகள் ஆகியவற்றை வழங்கினால் தான் அவர்களுக்கு பயன் உண்டு. ஆனால் இந்த கல்வி வருடம் இதுவரை விலை இல்லா சைக்கிள்கள், புத்தகப்பைகள் ஆகியவை வழங்கப்படவில்லை.

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப்பைகள், சைக்கிள்கள், அட்லஸ்கள், வண்ணபென்சில்கள், சீருடைகள், பஸ் பயண அட்டை, கணித உபகரணப்பெட்டி, மடிக்கணினி, காலணிகள், சத்துணவு உள்ளிட்ட 14 வகையான பொருட்களை வழங்கி வருகிறது.

இந்த கல்வி ஆண்டில் (2016-2017) பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் ஆகியவை சரியான நேரத்தில் மாணவ-மாணவிகள் பயன் பெறும் வகையில் வழங்கப்பட்டு விட்டன.

ஆனால் இந்த கல்வி ஆண்டு விலை இல்லா சைக்கிள்கள், புத்தகப்பை, காலணிகள் உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கப்படவில்லை.

இந்த கல்வி வருடம் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய சைக்கிள்களின் உதிரிபாகங்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சைக்கிள்கள் மழையில் நனைந்து கெட்டுப்போகும் நிலையில் உள்ளன.

இதற்கிடையே ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு பள்ளிகளில் சைக்கிள்கள் ஒருங்கிணைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த பணியை ஒப்பந்தத்திற்கு எடுத்த ஒருவர் கூறுகையில் சைக்கிள்கள் ஒருங்கிணைக்கும் பணி 98 சதவீதம் முடிந்துவிட்டது. 2 சதவீதம்தான் பாக்கி உள்ளது. அதையும் இன்றைக்குள் (புதன்கிழமை) முடித்துவிடுவோம் என்றார்.

மாணவர்களுக்கு சைக்கிள்கள், புத்தகப்பைகள், காலணிகள் உள்ளிட்ட அனைத்து விலை இல்லா பொருட்களும் பள்ளிகள் திறந்த உடன் அதாவது ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கினால் தான் அந்த பொருட்களினால் மாணவர்களுக்கு பயன் உண்டு.

எனவே இதற்கு உரிய உயர் அதிகாரிகள் இந்த கல்வி ஆண்டில் மீதம் உள்ள விலை இல்லா பொருட்களான சைக்கிள்கள், புத்தகப்பைகள், காலணிகள், லேப்டாப்கள் உள்ளிட்டவற்றை உடனே வழங்கவேண்டும் என்று பெற்றோர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கல்வி ஆண்டு முதல் மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகம் வழங்குவது போல பள்ளிகள் திறக்கும் அன்றே அத்தனை விலை இல்லா பொருட்களும் வழங்க அரசு உயர் அதிகாரிகள் ஏற்பாடு செய்யவேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media