வேளாண் சட்டங்களை திரும்ப கொண்டுவரும் திட்டம் இல்லை - மத்திய அமைச்சர்.!
Farmers Act
ரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டுவரும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
கடந 2020 -ஆம் ஆண்டு மத்திய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. அவை தங்கள் நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி அந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஓராண்டுக்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தை அடுத்த, கடந்த ஆண்டு அந்த சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் அறிவித்தார். பின்னர், நாடாளுமன்றம் கூடிய பொழுது, பல்வேறு சர்ச்சைகளுடன் அந்த சட்டங்கள் திரும்ப பெறப்பட்டன். இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில்,
ரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பக் கொண்டு வரும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை எனவும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கும் முடிவு அந்தந்த மாநிலங்களை சார்ந்தது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை திட்டத்தின் கீழ், சுமார் 1.82 லட்சம் கோடி ரூபாய், 11.78 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த பதிலில் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.