பா.ஜ., அரசு தமிழகத்தின் மீது, அரசியல், பொருளாதார படையெடுப்பை நடத்துகிறது; தமிழக முதலமைச்சர் குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


 '' தமிழகத்தின் மீது அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டு படையெடுப்பை பா.ஜ., அரசு நடத்துகிறது,'' என முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

வீரவணக்க நாள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும் போதே கூறியுள்ளார். அத்துடன் அங்கு அவர் மேலும் பேசுகையில்; இன்றும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஹிந்தியை, சமஸ்கிருதத்தை திணிக்கலாமா என மத்திய ஆட்சியாளர்கள் முயற்சி செய்கின்றனர்.

தமிழை அழிக்க ஹிந்தி நுழைக்கப்படுகிறது. தி.மு.க., ஆட்சியில் இரு மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதற்கு சிக்கல் கொண்டு வருவதற்கு தான், மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதே, ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கத்தான். 

எத்தனையோ பண்பாட்டு திணிப்புகளை கடந்து வந்துள்ளோம். 5,300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு பயன்பாடு தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த ஆய்வு முடிவுகளை சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மாநில அரசின் நிதியில், தமிழக மக்கள் உழைப்பால் உருவாக்கப்பட்ட பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை கவர்னர் நியமிப்பாரா? பல்கலை அமைக்க நிலம் கொடுத்து, பேராசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கிற எங்களுக்கு துணைவேந்தரை நியமிக்க தெரியாதா? ஏன் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர், பல்கலை வேந்தர் இருக்கக்கூடாது?பல்கலையை உருவாக்குவது மாநிலங்கள். 

பல்கலைகளை நிர்வகிக்கக்கூடிய தலைமை வகிக்கக்கூடிய அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு வேண்டாமா? எதை செய்ய வேண்டுமோ அதை செய்யாமல், எதை செய்யக்கூடாதோ அதை செய்கிறது மத்திய அரசு.

ஹிந்தியை திணிப்பார்கள். சமஸ்கிருத பெயர்களை புகுத்துகின்றனர். மாநில உரிமைகளில் தலையிடுகின்றனர். குடியுரிமை திருத்தச்சட்டத்தை கொண்டு வருகின்றனர். குழந்தைகளை பழிவாங்க நீட் தேர்வு நடத்துகின்றனர். புதிய கல்விக்கொள்கையை கொண்டுவருகின்றனர்.

தமிழக மக்கள் தொகையில் 2.2 சதவீத மக்கள் மட்டுமே ஏழைகளாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இது தேசிய சராசரியை விட மிகக்குறைவு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமையை முழுமையாக ஒழிக்க திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சியை பல்வேறு ஆதிக்க சக்திகள் விரும்பவில்லை. வளர்ச்சியை தடுக்க மாநில சுயாட்சியை சிதைக்கிறார்கள். கூட்டாட்சிக்கு வேட்டு வைக்கின்றனர். ஹிந்தி மொழியை திணிக்கிறார்கள். 

நிதியை தர மறுக்கிறார்கள். தமிழகத்தின் மீது அரசியல், பொருளாதார, சமூக பண்பாட்டு படையெடுப்பை பா.ஜ., அரசு நடத்துகிறது. அதற்கு எதிராக தி.மு.க., எந்த மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் போராடுகிறது. மொழிப்போர் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து கொண்டு உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The BJP government is conducting a political and economic invasion of Tamil Nadu the Tamil Nadu Chief Minister alleges


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->