தமிழக அரசின் வைக்கம் விருது - கர்நாடக எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு அறிவிப்பு.!
tn government announce vaikkam award to karnataga writer devanoora mahadeva
தமிழக அரசின் 2024-ம் ஆண்டுக்கான வைக்கம் விருது கர்நாடக எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 30.03.2023 அன்று சட்டமன்றப் பேரவையில் எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியாரை நினைவுகூறும் விதமாக, பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் "வைக்கம் விருது" சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் அறிவித்தார்.
அதன் படி, 2024-ம் ஆண்டிற்கான "வைக்கம் விருது" கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தை சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலருமான தேவநூர மஹாதேவா ஒருமக்களின் மொழியியல் உரிமைகளின் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்.
மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்ட இவர் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஶ்ரீ மற்றும் சாகித்ய அகாடெமி விருது போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவநூர மஹாதேவாவுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் உள்ளிட்டவை தமிழ்நாடு முதலமைச்சரால் கேரள மாநிலம் வைக்கத்தில் நாளை நடைபெற உள்ள வைக்கம் நினைவகம் திறப்புவிழா நிகழ்ச்சியில் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tn government announce vaikkam award to karnataga writer devanoora mahadeva