தமிழக கபடி வீரர்கள் மீது தாக்குதல்!....சீமான் கடும் கண்டனம்!
Attack on tamil nadu kabaddi players seeman strongly condemned
ராஜஸ்தானில் தமிழக கபடி வீரர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இந்திய அளவிலான கபடி போட்டியில் புள்ளிகள் முறையாக வழங்கப்படவில்லை என நடுவர்களிடம் முறையிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீரர்கள் மீது வடநாட்டு வீரர்கள் கடுமையாகத் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
தமிழ்நாட்டு பிள்ளைகள் மீது கொடுந்தாக்குதல் நடத்தியதோடு, தமிழ்நாட்டிற்கு திரும்பிச்செல்லுங்கள் என்றுகூறி அவமதித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
விளையாட்டில் கூட உரிமையைக் கேட்க முடியாதபடி தமிழ்நாட்டு பிள்ளைகள் அடித்து விரட்டப்படுவார்கள் எனில் எங்கே இருக்கிறது ஒருமைப்பாடு? எப்படி வரும் நாட்டுப்பற்று?
இந்திய ஒற்றுமை, தேசப்பக்தி பன்முகத்தன்மை, இறையாண்மை என்றெல்லாம் பாடமெடுப்பவர்கள் இப்போது வாய் திறப்பார்களா?
தமிழ்நாட்டு கபடி வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தமிழ்நாடு அரசு தமது கடும் கண்டனத்தை பதிவு செய்வதுடன், உரிய விசாரணை நடத்தி தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி தண்டனை பெற்றுத்தர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Attack on tamil nadu kabaddi players seeman strongly condemned