இன்று காலை வெளியான மரண செய்தி.! வேதனையில் மருத்துவர் இராமதாஸ்.! சோகத்தில் வன்னியர் இனமக்கள்.!
Dr ramadoss mourning to kayathoor muniyan mother death
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவடைந்த புறநானூற்று வீரன் கயத்தூர் முனியனின் தாயார் அன்னலட்சுமி அவர்கள் முதுமை & உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அன்னலட்சுமி சாதாரணத் தாய் அல்ல.... வீரத் தாய். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக களத்தில் போராடி, சமுதாய நலனுக்காக தன்னுயிரை ஈந்த புறநானூற்று வீரன் கயத்தூர் முனியனை நமக்கு அளித்த தாய் அவர். கயத்தூர் முனியனின் தியாகம் ஈடு இணையற்றது.

கயத்தூர் முனியனின் வீரத்தையும், தியாகத்தையும் இப்போது நினைத்தாலும் பெருமித உணர்வும், பெரும் மரியாதையும் ஏற்படுகிறது. போராட்டக்களத்தில் அவனுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை நினைக்கும் போது உடல் நடுங்குகிறது. கயத்தூர் முனியன் வீரச்சாவடைந்த போது அவனுக்கு வயது 27 மட்டும் தான். சில மாதங்களுக்கு முன்பு தான் அவனுக்கு திருமணமாகியிருந்தது. வன்னியர் தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி 17.09.1987 அன்று தொடங்கிய 7 நாள் தொடர்சாலை மறியல் போராட்டத்தை பனையபுரம் பகுதியில் தலைமையேற்று நடத்த வன்னியர் சங்கத்தில் மூத்த தலைவர்கள் ஏராளமானவர்கள் இருந்தனர். ஆனாலும் பனையபுரம் பகுதியில் போராட்டத்திற்கு நான் தான் தலைமை வகிப்பேன் என்று சண்டையிட்டு, அந்த வாய்ப்பை வாங்கிச் சென்றவன். அந்த அளவுக்கு துடிப்பானவன்.
சாலைமறியல் தொடங்கிய சிறிது நேரத்தில் அப்போராட்டத்தை குலைக்கும் நோக்குடன் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்ட போது, குண்டுகளை தனது மார்பில் தாங்கிய கயத்தூர் முனியன் தரையில் சுருண்டு விழுந்தான். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தாகத்தை தணிக்க தண்ணீர் தரும்படி கேட்டான் முனியன். ஆனால், தண்ணீர் தர மறுத்த காவலர்கள் முனியனின் வாயில் சிறுநீரை ஊற்றிக் கொடுமைப்படுத்தினர். இந்த செய்தி சென்னை மத்தியச் சிறையில் எனக்கு தெரிவிக்கப்பட்ட போது நிலைகுலைந்து போனேன். ஆனால், சிறையிலிருந்து விடுதலையாகி கயத்தூர் முனியனின் குடும்பத்தினரை சந்தித்து பேசிய போது, அன்னலட்சுமி அம்மாள் சிறிதளவும் நிலைகுலையவில்லை. மாறாக, இட ஒதுக்கீட்டுப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார்.

அதன்பிறகும் அன்னலட்சுமி அம்மாளின் இன உணர்வு குறையவில்லை. என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தார். 1989-ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்த போது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதன்பின் 32 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு பெற்ற போது அன்னலட்சுமி அம்மாள் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார். கொரோனா ஊரடங்கு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவரை சந்தித்து நானும் மகிழ்ந்திருப்பேன். விரைவில் அவரையும், குடும்பத்தினரையும் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்த நேரத்தில் அன்னலட்சுமி காலமானதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாட்டாளி சொந்தங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கயத்தூரில் இன்று (19.04.2021) மாலை 03 மணிக்கு நடைபெறவுள்ள இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச் சடங்கில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. சார்பு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு அன்னலட்சுமி அம்மாளுக்கு மரியாதை செலுத்துவார்கள்." என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr ramadoss mourning to kayathoor muniyan mother death