சமீப காலமாக கூட்டாட்சி தத்துவம், மாநில அரசுகளின் உரிமைகள், சுயசார்பு தன்மை என்பன பாதிக்கப்படுகின்றன; முதலமைச்சர் பேச்சு..!
MK Stalin speech that the federalism philosophy is being affected in recent times
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட, 75வது ஆண்டு விழா மற்றும், சென்னை வழக்கறிஞர் சங்கத்தின் 160-வது ஆண்டு விழா, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் தமிழாகி முதலமைச்சர் கலந்துகொண்டு வழக்கறிஞர் சங்கத்தின் சிறப்பு மலரையும் வெளிட்டு உரையாடினார்.
அங்கு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
'ஒரு நீதிபதி ஆங்கிலத்தில் பேசுவார் என்று நினைத்தோம்; தமிழில் பேசினார். மற்றொரு நீதிபதி தமிழில் பேசுவார் என்று நினைத்தோம்; ஆங்கிலத்தில் பேசினார். இதுதான், இருமொழிக் கொள்கை; இது தான் தமிழகம்.' என்று குறிப்பிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றம் இந்தியாவிலேயே தலைசிறந்த பாரம்பரியத்தை கொண்டது. இங்கு சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதிலும், முற்போக்கான சமூக வளர்ச்சியை நோக்கி நடைபோடுவதிலும் வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியமானது என தெரிவித்தார்.
அத்துடன், வழக்கறிஞர்கள் தான், சமூகத்தில் நிலவுகிற அநீதி என்ற நோயை குணப்படுத்தக்கூடிய மருத்துவர்கள்என்றும், ஜனநாயகத்தை செதுக்குவதில், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளின் பங்களிப்பை பாராட்டுகிறேன் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், அரசியலமைப்பு சட்டம் என்பது சமூக நீதி, சமத்துவத்தை அடைக்கிற ஒரு கருவி. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வாழ்க்கையின் கொள்கையாக அங்கீகரிக்கும் ஒரு முறை என, டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார் என சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அரசியலமைப்புரீதியாக, இந்தியா ஒரு ஜனநாயக, சோசலிஷ, மதச்சார்பற்ற இறையாண்மை பொருந்திய குடியரசு என்றும், இந்தியாவில் வெவ்வேறு மதம், இனம், பண்பாட்டு நடைமுறைகள் இருந்தாலும், நம் அரசியலமைப்பு சட்டம், அதன் அணுகுமுறையால் உயிர்ப்புடன் உள்ளது என தெரிவித்தார்.
அரசமைப்பின் உயிர்ப்பான நிலைத்தன்மைக்கு அரசியலமைப்புசட்டத்தின் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் எதிராக, உறுதியான துாண்களாக நிற்கும் சுதந்திரமான நீதித்துறை, சிறந்த நீதிபதிகள், வழக்கறிஞர்களின் பங்களிப்பு ஆகியவை தான் காரணம் என குறிப்பிட்டார்.
அத்துடன், சமீப காலங்களில், அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் ஒன்றான கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும், நிதி, கல்வி ஆகியவற்றில், மாநில அரசுகளின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. மாநில அரசுகளின் சுயசார்பு தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பின், நீதித்துறை, வழக்கறிஞர்கள் நலன், சட்டக் கல்விக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறதாகவும், தமிழ்நாடு வழக்கறிஞர் நல நிதியத்துக்கான மானியம், 10 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதன்படி, புதிதாக 73 நீதிமன்றங்கள், 1,689 பணியிடங்கள் மற்றும் இதர வசதிகளை உருவாக்க, 150.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிபதிகள் குடியிருப்பு, பராமரித்தல், கணினி உள்ளிட்ட அடிப்படை பணிகளுக்கு, 851.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், நீதித்துறை தொடர்பான கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர, தமிழக அரசு துணையாக இருக்கும் என்றும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வருகை தந்துள்ள இந்நேரத்தில், உச்ச நீதிமன்ற கிளையை, சென்னையில் அமைக்க வேண்டும் என மீண்டும் ஒருமுறை கோரிக்கை வைக்கிறேன் என அவர் பேசினார்.
இதனால், தென் மாநில மக்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் பயனடைவர் என்றும், அரசியலமைப்புசட்டம் என்பது, வழக்கறிஞர்களின் கையில் இருக்கும் ஒரு ஆவணம் தானே என கருதக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன், அது நம் வாழ்க்கை பயணத்தில், நம் வாழ்வின் தரத்தையே மேல்நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு வாகனமாகும. அது எப்போதுமே இந்த மண்ணின் ஆன்மாவாக விளங்குகிறது என, அம்பேத்கர் சொன்னார். அதுபோல வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மேலும் பேசினார்.
English Summary
MK Stalin speech that the federalism philosophy is being affected in recent times