திருப்பதியை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் லட்டு!...உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கம்!
Tirupati followed by Meenakshi Amman Kovil Laddu Food Safety Department Officer Explained
உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரியும் நிலையில், கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இவற்றுடன் வடை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பிரசாதமாக தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு கூட தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டதாகவும், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக பேசி இருந்தார்.
பின்னர் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு குறித்து தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டதில், மீன் எண்ணெய், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் விலங்குகளின் கொழுப்புகளும் திருப்பதி லட்டில் இருந்தது தெரியவந்தது.
இந்த விவகாரத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் குறித்தும் கேள்வி எழுந்தது.
இந்நிலையில் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராம பாண்டியன் , மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் குறித்து பலமுறை ஆய்வு செய்துள்ளதாகவும், லட்டு உள்பட அனைத்து பொருட்களும் சுத்தமாகவும், தரமாகவும் இருப்பது தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள், அழகர்கோவில் நெய் தோசை ஆகியவற்றை ஆய்வு செய்ததாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடதக்கது.
English Summary
Tirupati followed by Meenakshi Amman Kovil Laddu Food Safety Department Officer Explained