ஒரே ஆட்டம்! ஜாம்பவானின் சாதனையை சமன் செய்த அஷ்வின்! லிஸ்ட்ல டாப் யார் தெரியுமா?
Ravichandran Ashwin IND vs WI Cricket New Record
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலரான ரவிச்சந்திரன் அஸ்வின், தனது சுழல் பந்து வீச்சால் 12 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதன் மூலம் பல்வேறு சாதனைகளையும் அவர் முறியடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 8-வது முறையாக 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்து, அனில் கும்ப்ளேயின் சாதனையை சமன் செய்துள்ளார்.
அதிக முறை 10 விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியலில் கும்ப்ளேவும், அஷ்வினும் தற்போது 5-வது இடத்தில் உள்ளனர். கும்ப்ளே தனது 132 ஆட்டத்தில் தான் இந்த சாதனையை செய்தார். ஆனால், அஷ்வின் தனது 93-வது ஆட்டத்திலேயே இந்த சாதனையை புரிந்துள்ளார்.
முதல் இடத்தில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரனும் (22 முறை), இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வார்னும் (10 முறை), மூன்றாவது இடத்தில் நியூஸிலாந்து வீரர் ரிச்சர்ட் ஹாட்லியும் (9 முறை), நான்காவது இடத்தில் இலங்கை வீரர் ரங்கனா ஹெராத்தும் (9 முறை) உள்ளனர்.
இதேபோல், ஒரு இன்னிங்ஸில் 34-வது முறையாக 5 விக்கெட்டுக்கு மேல் அஸ்வின் எடுத்து, ரங்கனா ஹெராத்தின் சாதனையை சமன் செய்து 5 வது இடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரனும் (67 முறை), இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வார்னும் (37 முறை), மூன்றாவது இடத்தில் நியூஸிலாந்து வீரர் ரிச்சர்ட் ஹாட்லியும் (36 முறை), நான்காவது இடத்தில் இந்திய வீரர் அணில் கும்பிளேவும் (35 முறை) உள்ளனர்.
மேலும் அஸ்வின் 6-வது முறையாக இரண்டு இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்து மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரனும், இரண்டாவது இடத்தில் இலங்கை வீரர் ரங்கனா ஹெராத்தும் உள்ளனர்.
மேலும், வேஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய வீரரின் சிறந்த பந்து வீச்சு என்ற சாதனையும் அஸ்வின் படைத்துள்ளார்.
அந்த அணிக்கு எதிராக 2016-ல் இஷாந்த் சர்மா ஒரு இன்னிங்க்சில் 83 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றியதே சிறந்த பந்து வீச்சாக இருந்தது. தற்போது அதனை அஸ்வின் 71 ரன் மட்டுமே கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றி தகர்த்துள்ளார்.
English Summary
Ravichandran Ashwin IND vs WI Cricket New Record