சென்னையில் இருந்து காட்பாடி மார்க்கமாக இயக்கப்படும் 23 ரயில்கள் ரத்து.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் திருவலம் பொன்னை ஆற்றின் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்தில் ஏறபட்ட விரிசல் காரணமாக சென்னையில் இருந்து காட்பாடி மார்க்கமாக இயக்கப்படும் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக தென் மாநிலங்களில் மிககனமழை பெய்தது. இதன் காரணமாக பொன்னை ஆறு, பாலாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாலாற்றில் சில நேரங்களில் சுமார் ஒரு லட்சம் கன அடி அளவிற்கு கூட வெள்ள நீர் ஆறுகளில் ஓடியது.

வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றில் சுமார் 60 ஆயிரம் கனஅடி வரையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொன்னை ஆறு, பாலாற்றில் சென்று கலக்கும் வழித்தடத்தில் திருவலம் மற்றும் முகுந்தராயபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் பொன்னை ஆற்றுப்பாலத்தின் கீழ் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதை, நேற்று மதியம் ரயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்தனர். 

இந்த விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தின் மீது ரயில்கள் இயக்க தடை விதிக்க ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று மாலை சென்னையிலிருந்து 5.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் விரைவு ரயில், சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6.20-க்கு புறப்பட்டு வேலூர் கண்டோமென்மெட் செல்லும் பயணிகள் மின்சார ரயில் மற்றும் அரக்கோணத்தில் மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வரை செல்லும் பயணிகள் மின்சார ரயில்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இன்று சென்னை சென்ட்ரல்-கோவை இடையே சதாப்தி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-பெங்களூரு சதாப்தி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் – ஜோலார்பேட்டை ஏலகிரி விரைவு ரயில் ஆகியவை இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் சென்னை சென்ட்ரல்- மங்களூரு அதிவிரைவு ரயில், வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் இடையேயான அதி விரைவு ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதனை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த ரயில்வே பாலம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது சீரமைப்பு பணிகளுக்காக பல ரயில்கள் ஆங்காங்கே பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விரைவு ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு, ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவு கட்டணங்கள் திரும்பத் தரப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

23 trains from Chennai to Katpadi canceled


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->