பள்ளிகள் திறப்பை தமிழக அரசு தள்ளிவைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - டாக்டர் இராமதாஸ்!
Dr Ramadoss happy for TN School Reopen date change
கோடை வெப்பத்திலிருந்து மாணவர்களைக் காக்க பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டிருப்பது சிறந்த முடிவு என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கோடை வெப்பத்தின் கடுமை இன்னும் தணியாததை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் வரும் ஜூன் 7-ஆம் நாள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார்.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது ஆகும்.
தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் வாட்டி வதைப்பதாலும், வெப்பம் தணியும் வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருப்பதாலும் வெப்பம் தணியும் வரை பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கடந்த 23-ஆம் நாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன்.
அதையேற்று பள்ளிகள் திறப்பை தமிழக அரசு தள்ளிவைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாணவர்கள் நலன் தொடர்பான கருத்துரைகளை செவிமடுத்து, செயல்படுத்திய அரசுக்கும், அமைச்சருக்கும் பாராட்டுகள்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
English Summary
Dr Ramadoss happy for TN School Reopen date change