சிறு கடைகளுக்கு ரூ.1200 தொழில் உரிமத்தொகை..மாநகராட்சி கூட்டத்தில் முடிவு!
Industrial license of Rs.1200 for small shops.. Decision at the Municipal Meeting!
சென்னை கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு ஒப்படைக்கவும் மாநகராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. இந்த மன்றக் கூட்டத்துக்கு துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது கேள்வி நேரத்தின் போது பா.ஜ.க. உறுப்பினர் உமா ஆனந்த் சென்னை மாநகராட்சி எவ்வளவு கடன் வாங்கி உள்ளது என்றும் அதற்கு எவ்வளவு வட்டி கட்டுகிறீர்கள். ஒ.எஸ்.ஆர். லேண்ட் முறைகேடாக பயன்படுத்துவதாக தகவல் வருகின்றன என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா சென்னை மாநகராட்சி 2024-ம் ஆண்டு ரூ.3 ஆயிரத்து 63 கோடி கடன் வாங்கியது என்றும் இதில் ரூ.1,573 கோடி திருப்பி கட்டப்பட்டு உள்ளது என்றும் இன்னும் ரூ.1,488 கோடி நிலுவையில் உள்ளது.இதற்காக ரூ.8.5 கோடி வட்டி கட்டுகிறோம் காலாண்டுக்கு ஒரு முறை வாங்கிய கடன் திருப்பி செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.
இதையடுத்து ஆணையாளர் குமரகுருபரன் பேசுகையில்,சென்னையில் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய மளிகை கடைகள் செயல்பட்டு வருகின்றன என்றும் இந்த கடைகளுக்கு ஆயிரம் சதுரடி வரை ஆண்டுக்கு ரூ.3 ஆயிரத்து 500 தொழில் உரிமைத் தொகையாக கட்டணம் வசூலிக்கப்பட்டது என்றும் இதனால் 500 சதுர அடிக்குள் செயல்பட்டு வரும் சிறு மளிகைகாரர்கள் மிகவும் சிரமப்பட்டனர் என கூறினார்.
மேலும் அவர்களின் சுமையை குறைக்க மாநகராட்சி 2 நிலைகளாக வரையறுத்து உள்ளது என்றும் அதன்படி, 500 சதுர அடிக்குள் செயல்படும் மளிகைக் கடைகள் தொழில் உரிமக் கட்டணம் ரூ.1,200-ம், 501 சதுர அடியில் இருந்து 1000 சதுர அடி வரையிலான மளிகைக் கடைகள் ரூ.3 ஆயிரத்து 500-ம் தொழில் உரிமத் தொகையாக செலுத்த வேண்டும் என்று கூறினார்.
மேலும் இதன் மூலம் 500 சதுர அடிக்குள் இருக்கும் சிறு மளிகைக் கடைக்காரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 300 மிச்சப்படும் என்றும் இந்த புதிய தீர்மானத்துக்கு மாநகராட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என பேசினார்.
இதையடுத்து சென்னை கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு ஒப்படைக்கவும் மாநகராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட மெரினா கடற்கரை மற்றும் 95 ஏக்கர் பரப்பளவு கொண்ட பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர், திருவான்மியூர், புது கடற்கரை பகுதிகளை ஒரு வருடம் தூய்மையாக பராமரிக்க ரூ.4 கோடியே 54 லட்சம் தனியார் நிறுவனத்துக்கு வழங்கவும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
English Summary
Industrial license of Rs.1200 for small shops.. Decision at the Municipal Meeting!