வேலூரில் ரகசிய கூட்டம் நடத்தியுள்ள மாவோயிட்ஸ்கள்; என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை..! - Seithipunal
Seithipunal


 வேலுார் உள்ளிட்ட பகுதிகளில், மாவோயிஸ்ட் இயக்கத்தினர் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளதாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சில தினங்களுக்கு முன், தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 11 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த, மாவோயிஸ்ட் பண்ணைபுரம் கார்த்திக் என்பவர், சென்னையில், 'கியூ' பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த இவரின் நண்பன் சந்தோஷ்குமார் என்பவர், ஓசூரில் கைதானார். விசாரணையில், இவர்களுக்கு, வேலுாரைச் சேர்ந்த மாவோயிஸ்ட் ராகவேந்திரா, 36, என்பவர் தலைவராக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. கேரளாவில் கைதான இவரை, காவலில் எடுத்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அதில், ராகவேந்திராவின் சொந்த ஊர், வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரி. இவரின் தந்தை ராஜன், வணிக வரித்துறையில் காசாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராகவேந்திரா, பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தியதோடு, மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்துள்ளார். தன் பெயரை வினோத்குமார் மற்றும் ரவிமுகேஷ் என மாற்றி, கேரளா மற்றும் தமிழகத்தில் ஆதார் கார்டுகள் வாங்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராகவேந்திரா தலைமையில் கேரள மாநிலம், எடக்கரை வனப்பகுதியில், 20 மாவோயிஸ்ட்கள் ஆயுத பயிற்சி பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இவர்கள், மேற்கு தொடர்ச்சி மலையின், தமிழகம், கேரளா, கர்நாடகா வனப்பகுதிகளை, சிறப்பு மண்டலமாக அறிவித்து செயல்பட்டு வந்துள்ளனர்.

அத்துடன், கடந்த, 2015-இல், மாவோயிஸ்ட் ரூபேஷ் கைது செய்யப்பட்டத்தை தொடர்ந்து, மாவோயிஸ்ட்களை வழிநடத்தும் பொறுப்பை, ராகவேந்திரா ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதே ஆண்டு, கேரள மாநிலம், நிலம்பூர் வனப்பகுதியில், மாவோயிஸ்ட்கள் ஆயுதப்பயிற்சி பெற்றபோது, குப்பு தேவராஜ் என்ற மாவோயிட்ஸ் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும், பாலக்காடு மாவட்டம், மஞ்சக்கண்டியில், மாவோயிஸ்ட் மணிவாசகம், ரேமா, பெரிய கார்த்திக், அரவிந்த் ஆகியோரும் கொல்லப்பட்டனர். கடந்த, 2019-இல், வயநாடு பகுதியில் மாவோயிஸ்ட், 'கேடர் லீடர்' ஜலீல், 2020-இல் மற்றொரு கேடர் லீடர் வேல்முருகன், 'என்கவுன்டர்' செய்யப்பட்டனர். இதனையடுத்து, ராகவேந்திரா தலைமையிலான மாவோயிஸ்ட்கள், நிலை குலைந்துள்ளனர்.

அந்நிலையில், அமைப்பை பலப்படுத்த, ராகவேந்திரா தலைமையில், பண்ணைபுரம் கார்த்திக், சந்தோஷ்குமார் மற்றும் ஷர்மிளா ஆகியோர், தமிழகத்தில் வேலுாரிலும், கேரளாவில் கண்ணுாரிலும் ரகசிய கூட்டங்கள் நடத்தியது தெரியவந்துள்ளது. கடந்த 2021-இல் நிலம்பூரில் மீண்டும் ஆயுதப் பயிற்சி பெற முயன்ற போது ராகவேந்திரா சிக்கியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maoists held secret meetings in Vellore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->