சென்னை கனமழை எதிரொலி - விமான சேவைகள் பாதிப்பு!
Chennai Flight Services Impact Due to Heavy Rain
தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் மிகவும் வாட்டி வதைத்தது. கடுமையான வெப்ப அலையால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரங்களில் வீட்டிற்குள் புழுக்கமும் அதிகமாக இருந்ததால் மக்கள் மிகவும் அவஸ்தைப்பட்டனர்.
இந்நிலையில், சென்னையில் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மதியம் 3 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் கோடை வெப்பம் தணிந்து மழையுடன் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுகிறது. மேலும் பலத்த காற்றும் வீசி வருகிறது.
இந்நிலையில் சென்னை புறநகர்ப் பகுதிகளான கிண்டி, எழும்பூர், அண்ணாசாலை, கோயம்பேடு, மந்தவெளி, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, வடபழனி, வேளச்சேரி, கே.கே. நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இடி, மின்னலுடன் காற்றும் பலமாக வீசுவதால் அங்கு வானிலை மிக மோசமாக உள்ளது.
இந்நிலையில் சென்னைக்கு வந்த 5 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் நீண்ட நேரமாக வட்டமடித்துள்ளன. இதையடுத்து அபுதாபி சர்வதேச விமானம் பெங்களூரு சென்று தரையிறங்கியது. மேலும் 4 விமானங்கள் மழை நின்ற பிறகு ஒவ்வொன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன.
இந்நிலையில் சென்னையில் இருந்து புறப்படும் 14 விமானங்களின் சேவையும் இந்த கனமழையால் இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai Flight Services Impact Due to Heavy Rain