கட்சி தாவிய எம்எல்ஏக்கள்.. இரட்டை என்ஜின் அரசு தடம் புரண்டது.. ப.சிதம்பரத்தின் பரபரப்பு ட்விட்..!!
Chidambaram criticizes SC verdict in Shiv Sena case
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்து பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி புதிய அரசு ஆட்சி அமைத்தது. இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த மார்ச் மாதம் விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம்தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மார்ச் 16ல் ஒத்திவைத்தது.
சபாநாயகரின் அதிகாரம் தொடர்புடைய நபம் ரேபியா வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய 7 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு உடனடியாக மாற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 17ல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் 5 பேர் கொண்ட அமர்வில் தீர்ப்பு வெளியானது. சிவசேனா கட்சி, சின்னம், 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றப்படுகிறது.
நபம் ரேபியா வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரும் வழக்கும் பெரிய அமர்வுக்கு மாற்றப்படுகிறது. மகாராஷ்டிர சட்டப்பேரவை சபாநாயகர் அதிகாரம் தொடர்பான மூல வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
மேலும் சிவசேனா கட்சியின் கொறடாவாக ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த கோகவாலேவை நியமித்த சபாநாயகரின் முடிவு சட்டவிரோதமானது. உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் இந்த நீதிமன்றத்தின் மூலம் மீட்டெடுத்திருக்கலாம் என கருத்து தெரிவித்திருந்தனர்.
உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் ராஜினாமா செய்துவிட்டதால் இப்போது முந்தைய நிலை தொடரும் என அறிவிக்க முடியாது. மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததால் பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்ததில் தலையிட முடியாது என்ற பரபரப்பு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி இருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான பா சிதம்பரம் "மஹாராஷ்டிரா ஆளுநர் செய்தது தவறு, டில்லி துணை ஆளுநர் செய்தது தவறு. மஹாராஷ்டிரா சபாநாயகர் செய்தது தவறு, புதிய கொறடாவை அங்கீகரித்தது தவறு. கட்சி தாவிய சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு எதிரான தகுதியிழப்பு மனுவில் சபாநாயகர் விரைவில் முடிவு எடுக்காதது தவறு.
தவறு செய்தவர்கள் வெறும் பொம்மைகள் என்ற சந்தேகம் எழுவதால் பொம்மலாட்டுக்காரர் யார் என்ற கேள்வி எழுகிறது. பொம்மலாட்டுக்காரர் பேச மாட்டார்கள், உச்ச நீதி மன்றத் தீர்ப்பைப் பற்றிக் கருத்துச சொல்லமாட்டார்கள். இரட்டை என்ஜின் அரசு தடம் புரண்டு விட்டது" என தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Chidambaram criticizes SC verdict in Shiv Sena case