ஏழைகளுக்கு உயர் கல்வி: டி.பி. ஜெயின் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!  - Seithipunal
Seithipunal


சென்னை துரைப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் டி.பி.ஜெயின் அரசு உதவி பெறும் கலை - அறிவியல் கல்லூரியை சுயநிதி கல்லூரியாக மாற்ற கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகக்குறைந்த செலவில் உயர்கல்வி கிடைப்பதை தடுப்பதற்கான இந்த முயற்சியை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கவலை அளிப்பதாக, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் செயல்பட்டு வரும் டி.பி.ஜெயின் கல்லூரி, 1972-ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு கல்வி வழங்கும் உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. அப்போதே அந்தக் கல்லூரிக்கு அரசு நிதியுதவி வழங்கப்பட்டதால், அப்பகுதி மக்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி கிடைத்தது. 45 ஆண்டுகளுக்கு மேலாக அடித்தட்டு மக்களுக்கு தரமான கல்வி வழங்கி வந்த இந்தக் கல்லூரி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. அது அந்தக் கல்லூரியின் உயர்கல்விச் சேவையையும் கடுமையாக பாதித்திருக்கிறது.

டி.பி.ஜெயின் கல்லூரிக்கு கடந்த 20 ஆண்டுகளாக புதிய பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை; கடந்த 2020-21, 2021-22 ஆகிய கல்வியாண்டுகளில் எந்தப் படிப்புக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை; கடந்த 4 ஆண்டுகளாக அரசு நிர்ணயித்த ஆண்டுக்கட்டணம் ரூ.850க்கு பதிலாக ரூ.42,000 வசூலித்து கல்விக் கொள்ளையில் ஈடுபட்டது; பல்கலைக்கழக மானியக் குழு நிதியில் கட்டப்பட்ட கட்டிடங்களை வாடகைக்கு விட்டு பணம் வசூலித்தது; 6 ஆண்டுகளாக முதல்வரை நியமிக்காமல் பொறுப்பு முதல்வரைக் கொண்டு கல்லூரியை நடத்துவது; கல்லூரியின் முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்த 11 பேராசிரியர்களை பணி நீக்கம் செய்தது உள்ளிட்ட குற்றச் சாட்டுகளுக்கு கல்லூரி நிர்வாகத்தால் இன்று வரை சரியான விளக்கத்தை அளிக்க முடியவில்லை.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, அவை அனைத்தும் உண்மை என்பதை உறுதி செய்த உயர்கல்வித் துறை, அவற்றின் அடிப்படையில் கல்லூரிக்கு தனி அலுவலர் ஒருவரை நியமித்து, அரசே ஏன் ஏற்று நடத்தக்கூடாது? என்று கல்லூரி நிர்வாகத்திற்கு பல மாதங்களுக்கு முன் அறிவிக்கை அனுப்பியது. ஆனால், அதன்பின் இன்று வரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

டி.பி.ஜெயின் கல்லூரியில் கடந்த இரு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடத்தப்படாததால், அங்கு பட்ட மேற்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் அடுத்த மாதத்துடன் படிப்பை முடித்துச் சென்று விடுவார்கள்; பட்டப்படிப்பிலும் இறுதியாண்டு மாணவர்கள் மட்டுமே இருப்பார்கள். கடந்த 4 ஆண்டுகளாக மிக அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதால், மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள்  மட்டுமே படிக்கிறார்கள். வரும் ஆண்டிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை என்றால், அடுத்த ஆண்டில் டி.பி.ஜெயின் கல்லூரியில் ஒரு மாணவர் கூட இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு சூழல் ஏற்படுவதைத் தான் டி.பி.ஜெயின் கல்லூரி நிர்வாகமும் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

கல்லூரியில் மாணவர்கள் சேரவில்லை என்றால், இப்போது அரசு உதவி பெறும் கல்லூரியாக இருப்பதை சுயநிதி கல்லூரியாக மாற்றிக் கொள்ளலாம்; அதன் மூலம் கட்டுப்பாடில்லாமல் கட்டணம் வசூலிக்கலாம் என்பது தான் நிர்வாகத்தின் நோக்கம் ஆகும். அது நிறைவேற தமிழக அரசு இடம் கொடுக்கக்கூடாது.

டி.பி.ஜெயின் கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரியாக இருக்கும் வரை தான் அதில் ஆண்டுக்கு ரூ.850 மட்டும் கட்டணம் செலுத்தி ஏழை மாணவர்கள் படிக்க முடியும். இந்தக் கல்லூரியில் 14 வகையான பட்டப்படிப்புகளும், 7 வகையான பட்ட மேற்படிப்புகளும் உள்ளன. இவை அனைத்துக்கும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. கல்லூரி நிர்வாகத்தின் விருப்பப்படி சுயநிதி கல்லூரியாக மாற்றப்பட்டால், அதிக கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் தான் இடம் கிடைக்கும்; சமூகநீதி குழி தோண்டி புதைக்கப்படும். அதுமட்டுமின்றி, இதையே முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் கல்லூரிகள் சுயநிதி கல்லூரிகளாக மாற்றப்பட்டால், அதன் பின்னர் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உயர்கல்வி என்பது எட்டாக்கனியாக மாறி விடும்.

அரசு உதவி பெறும் பல்கலைக்கழகமாக நடத்தப்பட்டு வந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்த போது அதை அரசே ஏற்று நடத்திய முன்னுதாரணம் உள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் அவ்வாறு அரசே ஏற்று நடத்த 1976-ஆம் ஆண்டின் தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் 14(அ) பிரிவு வகை செய்கிறது. அதனால், இனியும் தாமதிக்காமல் டி.பி.ஜெயின் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும். அதன் மூலம் அக்கல்லூரிக்கு அதன் பொன்விழா ஆண்டில் புத்துயிரையும், புதிய விடியலையும் வழங்க அரசு முன்வர வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About college and education issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->