தமிழக அரசுக்கு அதிமுக முழு ஆதரவு - அறிவிப்பை வெளியிட்ட ஓபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர் திட்டத்தை தடுத்து நிறுத்த கர்நாடகாவுக்கு தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உரிமை இல்லை என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவுத் திட்டமான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைவுபடுத்தி அவர்களின் கனவினை நனவாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. முதன்முதலில் 1986ம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து 1994ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டும் போதிய நிதியுதவி கிடைக்காததன் காரணமாக அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற ஜெயலலிதா, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 18 ஒன்றியங்களில் உள்ள 6,755 குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜப்பானிய பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் 1,005 கோடி ரூபாய் நிதியுதவியுடன் நிறைவேற்றுவதற்கான கருத்துருவினை 18-08-2005 அன்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்கள். 

இதன் அடிப்படையில், நிதி உதவி பெறப்பட்டு 2008ம் ஆண்டு இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்பொழுதும் இந்தத் திட்டத்திற்கு கர்நாடக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து 27-03-2008 அன்று அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 26-03-2008 அன்று அறிவித்தார். இதன்படி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒகேனக்கல்லில் நடத்தப்பட்டது.

ஜெயலலிதா போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தவுடன், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு கர்நாடக அரசின் எதிர்ப்பைத் தடுத்திட மத்திய அரசின் ஒத்துழைப்பைக் கோரும் தீர்மானம் 27-03-2008 மற்றும் 01-04-2008 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

இந்தச் சூழ்நிலையில், 05-04-2008 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தெரிவிக்காமலேயே "கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும். பின்னர் நாம் கலந்து பேசி, தேவைப்பட்டால் களம் காண்போம்" என்று கூறி அந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தார் அப்போதைய முதலமைச்சர். இதனைக் கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விவாதிக்க வேண்டும் குரல் எழுப்பியவர் ஜெயலலிதா.

அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும், அரசியல் உறுதி மிக்க அரசுதான் மக்களுக்குத் தேவை என்றும், அத்தகைய அரசை அதிமுக வழங்கும் என்றும் சட்டமன்றத்திற்கு வெளியே அறிவித்தவர் ஜெயலலிதா. இந்தத் திட்டம் துவங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், ஜெயலலிதா 2011ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பணிகள் முடிவடைந்திருக்க வேண்டிய நிலையில் வெறும் 18 விழுக்காடு பணிகளே முடிவடைந்திருந்தன. 

ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பயனளிக்கக்கூடிய ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முடுக்கிவிட்டதன் காரணமாக 1,928 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

திமுக ஆட்சிக் காலத்தில் மூன்று ஆண்டுகளில் வெறும் 18 விழுக்காடு பணிகளே முடிவடைந்த நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 82 விழுக்காடு பணிகளை முடித்து இந்தத் திட்டத்தை 29-05-2013 அன்று காணொலிக் காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தவர் ஜெயலலிதா. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட முழுக் காரணமானவர் ஜெயலலிதாவும், அதிமுகவும் ஆட்சியும்தான் என்பதை இந்தத் தருணத்தில் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் அதனை எதிர்ப்பது என்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது கர்நாடக அரசு. அந்த வகையில் தற்போது தனது எதிர்ப்பினை கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக அரசின் இந்த எதிர்ப்புக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவேரி நதிநீர் பங்கீட்டில், தமிழ்நாடு கீழ்ப்பகுதி மாநிலம். சட்டப்படி தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய நீரைக் கூட திறந்துவிட மறுப்பதையும், கர்நாடகாவில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு உபரி நீரை திறந்துவிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்ற கர்நாடக அரசுக்கு தமிழ்நாட்டிற்குள் மேற்கொள்ளவிருக்கும் ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தடுத்து நிறுத்த தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உரிமை இல்லை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டிற்கு உண்டு. இதனை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு அதிமுக தனது முழு ஆதரவினை நல்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Say About Hogenakkal issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->