ப்ரீபெய்ட் மின்கட்டண மீட்டர்: தமிழக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு - கொந்தளிக்கும் அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss condemn to tngovt DMK MKStalin Prepaid EB Metter
தமிழ்நாட்டில் மின்சார பயன்பாட்டை கணக்கிடுவதற்காக ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் ப்ரீபெய்ட் மீட்டர் முறையையும் அறிமுகம் செய்ய வேண்டும் செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் யோசனையை ஏற்க தமிழக அரசு மறுத்திருக்கிறது. போஸ்ட் பெய்ட் மீட்டர் முறையை மட்டுமே நடைமுறைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியிருக்கிறது. நுகர்வோர் நலனுக்கு எதிரான திமுக அரசின் இந்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.
ப்ரீபெய்ட் மீட்டர் முறையை செயல்படுத்த முடியாது என்பதற்காக இரு காரணங்களை தமிழக அரசு கூறுகிறது. முதலாவது, ப்ரீபெய்ட் மீட்டர் முறையை அனைத்து நுகர்வோரும் ஏற்க மாட்டார்கள் என்பது. இரண்டாவது ப்ரீபெய்ட் மீட்டர் முறை கொண்டு வரப்பட்டால், 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்பதாகும். இந்த இரு காரணங்களுமே ஏற்றுக்கொள்ள முடியாதவை.
ப்ரீபெய்ட் மீட்டர் முறையை அறிமுகம் செய்வது தொடர்பாக பொதுமக்களிடம் விரிவான கருத்துக்கேட்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ப்ரீபெய்ட் முறையின் சாதகங்கள் எதுவும் இன்னும் மின் நுகர்வோருக்கு எடுத்துக்கூறப்படவில்லை. அதற்குள்ளாகவே ப்ரீபெய்ட் மீட்டர் முறையை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுவது தவறு.
அதுமட்டுமின்றி, ப்ரீபெய்ட் மீட்டர் நடைமுறைக்கு வந்தால் இலவச மின்சாரம் வழங்க முடியாது என்பதும் தவறு. இன்றைய தொழில்நுட்பத்தில் முதல் 100 யூனிட்டுகளுக்கு சுழியக் கட்டணம் என்று மீட்டரில் பதிவு செய்வதன் மூலம் இலவச மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யலாம். அதற்கு வாய்ப்பில்லை என்றால், முதல் 100 யூனிட்டுக்கான கட்டணத்தை நுகர்வோரிடமிருந்து வசூலித்து விட்டு, அதை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம்.
ப்ரீபெய்ட் மீட்டர் முறையில் பல நன்மைகள் உள்ளன. இந்த முறையில் மின்சாரக் கட்டணம் முன்கூட்டியே செலுத்தப்பட்டு விடும் என்பதால் மின்சார வாரியத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படாது.
அதுமட்டுமின்றி, ஒரு மாதத்தில் குறிப்பிட்ட தேதி வரை எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்தியிருக்கிறோம்; நாம் செலுத்திய பணத்திற்கு இன்னும் எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்த முடியும் என்பது நுகர்வோருக்கு தெரியும் என்பதால் அவர்கள் தேவையற்ற மின்சாரப் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள முடியும். இது நுகர்வோர், மின்சார வாரியம் ஆகிய இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும்.
2021-ஆம் ஆண்டு தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இரு மாதங்களுக்கு பதிலாக மாதம் ஒருமுறை மின்சாரப் பயன்பாட்டை கணக்கெடுக்கும் முறையை அறிமுகம் செய்வோம் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் அந்த வாக்குறுதியை செயல்படுத்தவில்லை.
அதுகுறித்து கேட்கும் போதெல்லாம், மாதந்தோறும் மின்சாரப் பயன்பாட்டை கணக்கிட போதிய பணியாளர்கள் இல்லை என்று கூறி வந்தது. ப்ரீபெய்ட் மீட்டர் முறை கொண்டு வரப்பட்டால், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிட பணியாளர்கள் தேவையில்லை. அதனால் மாதந்தோறும் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மட்டுமே கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அதனடிப்படையில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என்பதால் ஒவ்வொரு இணைப்புக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 வரை மிச்சமாகும்.
எனவே, ப்ரீபெய்ட் மீட்டர் முறையை தமிழக அரசு எதிர்ப்பது நியாயமல்ல. போஸ்ட் பெய்ட் மீட்டர் முறை, ப்ரீபெய்ட் மீட்டர் முறை ஆகிய இரு முறைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களுக்கு எது தேவையோ, அதை அவர்கள் தேர்வு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். ப்ரீபெய்ட் மீட்டரைப் பயன்படுத்தி, மாதாந்திர மின்கணக்கீட்டையும் நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss condemn to tngovt DMK MKStalin Prepaid EB Metter