பெலிக்ஸ் வீட்டில் சோதனை திமுக அரசின் பாசிச நடவடிக்கை! - கொந்தளிக்கும் சீமான்.!!
Seeman condemned DMK MKStalin
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரது வீட்டில் சோதனையிடும் காவல்துறையின் செயல்பாடு வெளிப்படையான அத்துமீறலாகும். அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு வீட்டில் சோதனை செய்வதெல்லாம் முழுக்க முழுக்கப் பழிவாங்கும் நடவடிக்கையேயாகும்.
டெல்லி சென்று ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டைக் கைதுசெய்ததோடு, சாதாரண அவதூறு வழக்கிற்கு அவரது வீட்டில் சோதனையும் இடுகிறது காவல்துறை. எதற்காக இந்தச் சோதனை நடவடிக்கை? அவரது குடும்பத்தினரையும், அவரைச் சார்ந்தவரையும் இது பாதிக்காதா? சவுக்கு சங்கர் பேசியதற்கு பெலிக்ஸ் ஜெரால்டைக் கைதுசெய்ததே தவறு எனும்போது, இப்போது அவரது வீட்டில் சோதனையும் இடுவது பாசிச நடவடிக்கை இல்லையா? ஊடகவியலாளர்கள் சித்திக் காப்பான், ராணா அய்யூப் போன்றோர் மீதான அடக்குமுறைக்கு எதிராகக் குரலெழுப்பிய முதல்வர் ஸ்டாலின் அவரது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஊடகவியலாளர் தம்பி பெலிக்ஸ் ஜெரால்டின் கைது மற்றும் ஒடுக்குமுறைக்கு வெட்கப்படவேண்டும்.
அதேபோல, அரசியல் விமர்சகர் தம்பி சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சியிருக்கும் திமுக அரசின் செயல்பாடு கண்டனத்திற்குரியது. காவல்துறையினர் குறித்தான அவரது கருத்துகளுக்காக, ஏற்கனவே இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாய்ச்சப்பட்டிருக்கும் குண்டர் தடுப்புக்காவல் சட்டமென்பது தேவையற்றதாகும்; இது அவரை ஓர் ஆண்டு சிறையிலேயே முடக்கும் அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டதாகும். சமூக அமைதியைக் கெடுப்பவர்களையும், சமூகத்திற்குத் தீங்கு விளைவிப்பவர்களையும், எண்ணற்ற குற்ற வழக்குகளைக் பின்னணியாகக் கொண்டவர்களையும் முடக்கி, அவர்களது செயல்பாடுகளைத் தடுத்து வைப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தை அவதூறு வழக்குகளுக்கும் பொருத்துவதென்பது வெளிப்படையான அதிகாரமுறைகேடாகும். அதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
இத்தோடு, கோவை மத்திய சிறைக்குள் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சவுக்கு சங்கர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரின் கருத்தோடு முழுமையாக முரண்படும் அதேவேளையில் சிறைக்குள் அவர் மீது தொடுக்கப்பட்டத் தாக்குதல்கள் உண்மையாக இருப்பின் அதை கடுமையாக எதிர்ப்பது நம் கடமையாகும். அதனை ஒருபோதும் ஏற்கவோ, அங்கீகரிக்கவோ முடியாது. சவுக்கு சங்கரின் அரசியல் நிலைப்பாடுகளையும், அவரது செயல்பாடுகளையும் மதிப்பிட்டு, காவல்துறையின் மூலம் விளையும் இக்கொடுங்கோல் செயல்பாடுகளைப் பொறுத்துக் கொண்டோமென்றால், நாளை இதேபோன்ற வதையும், தாக்குதல்களும் எவர்க்கும் ஏற்பட நேரிடும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஆகவே, தம்பி சவுக்கு சங்கர் மீது பாய்ச்சப்பட்ட குண்டர் சட்டத்தைத் திரும்பப் பெற்று, இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும், ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மீதான தொடர் ஒடுக்குமுறையை கைவிட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman condemned DMK MKStalin