15 அடி உயரம் புற்றுமாரியம்மன்.. ஐம்பொன் வேல்..அருள்மிகு புற்றுமாரியம்மன் திருக்கோயில்.!
Today special putru mariyamman kovil
இந்த கோயில் எங்கு உள்ளது?
கடலூர் மாவட்டத்தில் உள்ள கிள்ளை என்னும் ஊரில் அருள்மிகு புற்றுமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
கடலூரில் இருந்து சுமார் 33 கி.மீ தொலைவில் உள்ள கிள்ளை என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கடலூரில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
கோயில் உள்ளே 15 அடி உயரத்தின் ஸ்ரீ புற்றுமாரியம்மன் மனித உருவிலும், அருகில் மூலவர் கருங்கல் விக்ரகத்தில் அருள்பாலிக்கின்றார்.
இத்திருக்கோயில் அதிசயத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
உள் பிரகாரத்தில் எட்டு கரங்களுடன் ரத்த காளியும், நான்கு கரங்களுடன் பேச்சியம்மனும் அருள்பாலிக்கின்றனர்.
இரு கரங்களுடன் மூன்றடியில் கிராம தேவதையாக பெரியாச்சி வடக்குப் பக்கம் பார்த்து அருள்பாலிக்கின்றாள்.
வேறென்ன சிறப்பு?
விமானம் சீமை ஓட்டினால் கட்டப்பட்டுள்ளது. விமானத்தில் ஒரு கலசம் மற்றும் நான்கு பக்கமும் பூத கணங்கள் அமைந்துள்ளன.
கோயில் நுழைவு வாயில் முன் இடப்பக்கம் விநாயகர், வலப்பக்கம் ஐந்தடியில் ஐம்பொன் வேலும் அமைக்கப்பட்டுள்ளது.
வெளி பிரகாரத்தில் வடக்குப் பக்கம் பார்த்து துர்க்கை அம்மன் அருள்பாலிக்கிறார். இச்சன்னதியில் சிறு கலசம் உள்ளது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
விநாயகர் சதுர்த்தி, பங்குனி உத்திரம், கார்த்திகை, ஆடி மாதம் முதல் வெள்ளி பேச்சியம்மனுக்கு சிறப்பு வழிபாடு, நான்காம் வெள்ளி திருவிளக்குப் பூஜை ஆகியவை நடைபெறுகிறது.
தை மாதம் முதல் வெள்ளி அம்மனுக்கு சிறப்பு பூஜையும், கடைசி வெள்ளி சுமங்கலி பூஜையும், வைகாசி மாதம் தீ மிதி உற்சவம் உள்ளிட்டவை சிறப்பாக நடைபெறும்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
கல்வி, திருமணத்தடை, புத்திர பாக்கியம், கண்நோய் மற்றும் அம்மை உள்ளிட்ட நோய்களுக்கு இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பக்தர்கள் நெய் தீபம் ஏற்றியும் மற்றும் தானியங்களை காணிக்கையாக அளித்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special putru mariyamman kovil