என்ன நியாயம் இது? உங்களுக்கும், பாசிஸ்டுகளுக்கும் வேறுபாடு? - மு.க ஸ்டாலினுக்கு பரபரப்பு கடிதம் - Seithipunal
Seithipunal


காவல்துறையினரையும் பெண் காவலர்களையும் விமர்சனம் செய்ததாக பதியப்பட்ட வழக்கில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மற்றும் நெறியாளர் ஃபெலிக்ஸ் கிரால்ட் ஆகியோர் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சவுக்கு சங்கரை கைது செய்த கோவை சைபர் க்ரைம் போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அதே போன்று டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்ட ஃபெலிக்ஸ் கிரால்ட் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்‌ 

இந்த நிலையில் சமூக ஆர்வலர் சுப.உதயகுமார் முதலமைச்சரின் மு.க ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் உங்களுக்கும் பாசிஸ்டுகளுக்கும் அடிப்படை வேறுபாடுகள் இருப்பதாக நாங்கள் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறோம் என கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதத்தில் "மாண்புமிகு முதல்வர் அவர்களின் மேலான கவனத்திற்கு, வணக்கம். பெலிக்ஸ் ஜெரால்ட் அவர்களை டெல்லியில் கைது செய்து திருச்சிக்கு கொண்டு வந்து சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து விசாரித்துவிட்டு அவருடைய துணைவியாரிடம் கூட சொல்லாமல் எங்கோ கொண்டு செல்கிறார்களாமே உங்கள் காவல்துறையினர்? அவர் துணைவியாரே சொன்ன தகவலின் அடிப்படையில் தான் இதை சுட்டிக் காட்டுகிறேன். என்ன நியாயம் ஐயா இது? 

ஒருவர் கைது செய்யப்படும்போது அவருடைய குடும்பத்தினருக்கு முழு தகவல்களும் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதானே நடைமுறை? அது ஏன் தமிழ்நாட்டில், உங்கள் ஆட்சியில் மீறப்படுகிறது ஐயா?

பாசிசத்தை முன்னின்று எதிர்க்கும் உங்கள் ஆட்சியில் இப்படி ஒரு மனிதர் நடத்தப்படுவதை எப்படி அனுமதிக்கிறீர்கள்? நெருக்கடி நிலைக் காலத்தில் இப்படியெல்லாம் அத்துமீறல்களை, கொடூரங்களை அனுபவித்த நீங்கள் உங்கள் ஆட்சியில் அதே மாதிரியான கொடூரங்கள் அரங்கேறுவதை எப்படி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?

அந்தக் காலக்கட்டத்தில் தி.மு.க-காரரான என்னுடைய தந்தையாரும் மிசா காவலர்களால் தேடப்பட்டு, தலைமறைவாக இருந்த காரணத்தால் மட்டுமே தப்பித்தார். தி.மு.க கட்சிக்காக சற்றொப்ப 15 முறை சிறை சென்ற என்னுடையத் தந்தையாரை நானே சிறைக்குச் சென்று சந்தித்து, துணிகள், பழங்கள் கொடுத்துப் பார்த்திருக்கிறேன். நல்லவேளை, என் அப்பாவின் கை, கால்கள் அப்போது உடைக்கப்படவில்லை. ஒரு கல்லூரி மாணவனாக இருந்த நானும் கண்ணியமாக, பாதுகாப்பாகவே நடத்தப்பட்டேன். ஆனால் இன்று ஏன் இந்த அவலத்தை நாம் எதிர்கொண்டு நிற்கிறோம்?

சிறையில் சவுக்கு சங்கரின் கை உடைப்பு, பெலிக்ஸ் ஜெரால்டு அலைக்கழிப்பு, விவசாய விளைநிலங்களைப் பாதுகாக்க முயலும் விவசாயிகள் மீது குண்டர் சட்டம், பிணையில் வெளியே வர முடியாத அடக்குமுறை - இவற்றையெல்லாம் பார்க்கும்போது, என்னைப் போன்றோருக்கு நெஞ்சம் பதறுகிறது.

பணம், பதவி, புகழ், அதிகாரம், குடும்பத்தாரின் வர்த்தக லாபம், சொத்துக் குவிப்பு என எதையும் வேண்டாது, மக்களுக்காகப் போராடிய காரணத்தால் மட்டும் கொடும் வழக்குகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுடைய நிலையும் இதுதானே? உங்கள் காவல்துறை, சிறைத்துறை போன்றவை எங்களையும் இப்படித்தானே நடத்துவார்கள்?

பாசிச பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால், இந்த நாட்டில் அச்சமின்றி, அமைதியாக, கண்ணியத்தோடு வாழ முடியாது என்கிற ஒரே காரணத்தால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உங்கள் கட்சிக்காரர்களோடு, உங்கள் கூட்டணி கட்சியினரோடு பயணித்ததன் பயன் இந்த பயமும், பரிதவிப்பும்தான் என்றால், நாங்கள் பா.ஜ.க-வினரோடு சமரசம் செய்துகொண்டு சந்தோசமாக வாழ்வோமே?

தயவுசெய்து மெளனம் கலையுங்கள் முதல்வர் அவர்களே! உங்களுக்கும் பாசிஸ்டுகளுக்கும் அடிப்படை வேறுபாடுகள் இருப்பதாக நாங்கள் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lettered to cm We believe difference between you and fascists


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->