காணும் பொங்கல்... கணுப்பிடி... உடன் பிறந்தவர்களுக்கு ஓர் நாள்..!!
Kanum pongal special 2022
வம்சத்தை வளர செய்யும் கணுப்பிடி நோன்பு..!!
பண்டிகை என்பது பகிர்ந்தளிப்பதும், பெரியவர்களின் ஆசியைப் பெறுவதுமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் பொங்கல் விழாவின் நான்காவது நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இது கன்னிப்பொங்கல் என்றும், காணும் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் கணுப்பிடி நோன்பை கடைபிடிப்பது வழக்கம்.
இந்த விரதத்தை உடன்பிறந்த சகோதரர்களின் நலனை முன்னிட்டு பெண்கள் ஏற்கின்றனர். திருமணம் ஆகாத பெண்களும் இதைக் கடைபிடிக்கலாம் என்பதால் கன்னிப்பொங்கல் என்று அழைக்கப்படுகிறது.
கணுப்பிடி நோன்பு :
கணுப்பிடி நோன்பு, உடன்பிறந்த சகோதரர்களுக்காக பெண்கள் கடைபிடிக்கும் நோன்பாகும். உடன்பிறந்த சகோதரர்கள் நலமும், வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது இந்நோன்பின் சிறப்பாகும்.
இப்பண்டிகையின்போது உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர்களின் ஆசியை பெறுதல் என்பன அடங்கும்.
வம்சத்தை வளர செய்யும் வழிபாடுகள் பல உள்ளன. அந்த வழிபாடுகளில் மிக முக்கியமானது காணும்பொங்கல் என்கிற கணுப் பண்டிகை.
கணுப்பிடி பூஜை :
முன்பெல்லாம் கிராமத்தில் இதை விமர்சையாக கொண்டாடுவார்கள். பெண்கள், பொங்கல் பானையில் கட்டி வைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வயதில் முதிர்ந்த ஐந்து சுமங்கலிகளிடம் கொடுத்து, கல்லில் இழைத்து தங்கள் நெற்றியில் பூசி கொள்வார்கள்.
இரண்டு வாழை இலைகளை கிழக்குப் பக்கமாக நுனியை வைத்து, ஆற்றங்கரை அல்லது வீட்டு மொட்டைமாடியில் கணுப்பிடி வைப்பார்கள். முன்னதாக, அந்த இடத்தில் கோலமிட வேண்டியது அவசியம். பிறகு, செம்மண் பூசி மெழுகுவது இன்னும் சிறப்பும், மகத்துவமும் வாய்ந்தது.
வெற்றிலை-பாக்கு, பழம், தேங்காய், கரும்புத் துண்டு, மஞ்சள் அட்சதை (முனை முறியாத அரிசி), பூக்கள் ஆகியவை ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் ஆரத்தியும் (மஞ்சள், சுண்ணாம்பு, குங்குமம் கலந்து கரைத்த நீர்) தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
கார்த்திகை எண்ணெயும், கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு என்பது பழமொழி. உடன்பிறந்த சகோதரனது நலத்தைக் கருத்தில் கொண்டு ஆற்றங்கரை அல்லது மொட்டைமாடியில் வாழை இலை வைத்து முதல்நாள் பொங்கிய பொங்கலில் ஐந்து வகை சாதங்களைத் தயாரிப்பார்கள்.
மஞ்சள் கலந்து மஞ்சள் சாதமும், குங்குமம் கலந்து சிவப்பு சாதமும், பால் கலந்து வெள்ளை சாதமும், தயிர் சேர்த்த தயிர்சாதமும், வெல்லம் சேர்த்த சர்க்கரைப் பொங்கலையும் கலந்து ஒவ்வொரு அன்னத்தையும் 5 அல்லது 7 என்ற ஒற்றைப்படையில் பிடித்து இலையில் வைக்க வேண்டும்.
வைக்கும்போது காக்கா பிடி வெச்சேன்.. கணுப்பிடி வெச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம்.. கண்டவர்கெல்லாம் சந்தோஷம் என்று உடன்பிறந்தவர்களின் நலனுக்கு வழிபட வேண்டும்.
மாலையில் உடன்பிறந்தவர்களிடம் ஆசிபெற்று அவர்கள் தரும் அன்பளிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். உடன்பிறந்தவர்களும், குடும்பத்தில் உள்ளவர்களும் ஒன்றாக இணையும் இந்நாளில் வீட்டு பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவார்கள். பிறகு குடும்பமாக வெளியே சென்று வருவார்கள்.
கணுப்பிடி வைத்த பெண்கள் அன்று இரவு சாப்பிட மாட்டார்கள். இந்த பண்டிகையையொட்டி, பிறந்த வீட்டுச் சீராகப் பெண்களுக்குப் பணமோ, துணியோ பிறந்த வீட்டில் இருந்து வரும். அந்த நாளில், வீடே குதூகலமாகிவிடும்.
English Summary
Kanum pongal special 2022