முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உடன் இன்று முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
இந்த கூட்டம் குறித்து ஓபிஎஸ் விடுத்துள்ள அறிக்கையில், "தொண்டு என்பது தன்னலம் துறந்து பிறர் நலத்துக்காக உழைப்பது. இந்தத் தொண்டு தொழிலாக மாறியபோது, பொதுமக்கள் வெகுண்டெழுந்த நிலையில், தமிழ்நாட்டின் நலன்களுக்காக, தமிழக மக்களின் நலன்களுக்காக, தமிழ்நாட்டில் ஒரு பொற்கால ஆட்சியை உருவாக்கித் தரவேண்டும் என்பதற்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மக்கள் இயக்கம்.
ஒருமுறை பேரறிஞர் அண்ணா அவர்கள் பொதுக்கூட்ட மேடையில் இருந்த ஒலிபெருக்கி சாய்மேசை முன் பேசுவதற்காக சென்று நின்றபோது, அவரின் முகம் கீழேயிருந்த தொண்டர்களுக்கு தெரியவில்லை. மேடையை அகற்றுமாறு தொண்டர்கள் கூச்சலிட்டனர். அப்போது ஒரு தொண்டர் ஒரு பெட்டியைக் கொண்டு வந்து போட்டு அதில் நின்று பேசுமாறு பேரறிஞர் அண்ணாவை கேட்டுக் கொண்டார். மேடையில் ஏறி தனது பேச்சை தொடங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் "தொண்டர்களால் உயர்ந்தவன் நான் என்பது இப்போது புரிந்திருக்கும்" என்றார்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் வழியில் வந்த புரட்சித் தலைவர் அவர்களும், அவர் உருவாக்கிய இயக்கமும் தொண்டர்களுக்கான இயக்கம். அதனால்தான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டதிட்ட விதிகளில் தொண்டர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டதிட்ட விதி 20(1)-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முழு நிர்வாகத்திற்கும் பொதுச் செயலாளரே பொறுப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விதி 20(2)-ல், கழகப் பொதுச் செயலாளர் என்பவர் கழக அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படை நோக்கம் என்னவென்றால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் தன்னலவாதிகளின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி விடக்கூடாது என்பதுதான்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவிற்குப் பிறகு, "தொண்டர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்ற விதியை கட்டிக்காத்து, கழகத்தை இந்திய நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிய பெருமைக்குரியவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகு, கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அம்மா அவர்கள்தான் எனவும், கழகத்தின் நிர்வாக முடிவுகளை மேற்கொள்வதற்காக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பொதுக் குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கழகத் தொண்டர்களால் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுகுறித்து, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, இந்தியத் தேர்தல் ஆணையமும் இதனை அங்கீகரித்துவிட்டது.
மாண்புமிகு அம்மா அவர்கள் வகுத்துத் தந்த கோட்பாட்டில், 'அமைதி', 'வளம்', 'வளர்ச்சி' என்ற வெற்றிப் பாதையில் கழகம் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென்று 'பண பலம்', ‘படை பலம்', 'அதிகார பலம்’ ஆகியவற்றின் துணையோடு 'ஒற்றைத் தலைமை' என்ற முழக்கத்தை முன்னிலைப்படுத்தி, நிர்வாகிகள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகப் பெரிய பிளவை ஒரு சர்வாதிகாரக் கூட்டம் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்டு, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டது.
இந்தச் சூழ்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கண்டெடுத்த வெற்றிச் சின்னமாம் 'இரட்டை இலை' வெற்றி பெற வேண்டுமென்பதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை பொதுக் குழு முடிவு செய்யும் என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையினை கழகம் ஏற்றுக் கொண்டது.
இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையை முற்றிலும் புறக்கணித்து, தன்னிச்சையாக, ஒரு சாராரின் முகவராக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அவைத் தலைவர் நடந்து கொண்டது எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், எந்த உணர்வுடன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோ அந்த உணர்வையும், உருவத்தையும் அவைத் தலைவர் அவர்கள் அறவே நிராகரித்துள்ளார்.
இருந்தபோதிலும், 'இரட்டை இலை' வெற்றி பெற வேண்டுமென்பதற்காக கழகம் தனது வேட்பாளரை திரும்பப் பெற்றுக் கொண்டது. இவ்வளவுக்குப் பிறகும், 'இரட்டை இலை' வெற்றி பெற முடியாத சூழ்நிலை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நிலவுவதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையை நினைக்கும்போது, “அதிகாரம் கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது. அதிக அதிகாரம் அளவு கடந்த போதையைத் தரும். அதிகாரத்தைக் கையாண்டு ஒரு முறை அனுபவப்பட்டுவிட்டவர்கள், வெகு சுலபத்தில் அதனைக் கைவிடத்துணியார். என்றும் தன்னிடத்திலேயே அதிகாரம் சிரஞ்சீவியாக நிலைத்திருக்கப் பார்த்துக் கொள்வதில் மிக்க கவலை எடுத்துக் கொள்வர்.
மக்கள் ஆட்சி முறைக்கு இது முற்றும் புறம்பானது. இதனை முளையிலே நசுக்கி ஒழிக்க வேண்டியது மக்களாட்சி முறையில் நம்பிக்கைக் கொண்டவர்களின் நீங்காக் கடமையாகும்” என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் அமுதமொழிதான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருகிறது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கேற்ப, 'அநியாயம்', 'அதர்மம்', 'அராஜகம்', 'அதிகார போதை', 'ஆணவம்' ஆகியவற்றின் துணைகொண்டு ஒரு சர்வாதிகாரக் கும்பல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அபகரிப்பதை தடுக்கும் வகையில், இன்று நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு :
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் தொண்டர்கள் இயக்கத்தை, மக்கள் இயக்கத்தை, சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடமிருந்து மீட்டெடுப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான் எனத் தீர்மானிக்கப்படுகிறது.
தற்போது மாவட்டந்தோறும் நியமனம் செய்யப்பட்டு வரும் நிர்வாகிகளின் பணியை மேலும் துரிதப்படுத்தி, விரைவில் அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவுகளில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது.
'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்தநாள் விழா”, “புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா' மற்றும் ‘கழகத்தின் பொன் விழா' என முப்பெரும் விழாவினை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்த தீர்மானிக்கப்படுகிறது.
“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, தலைவன் இருக்கிறான் மயங்காதே" என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் கழகத்தை சர்வாதிகார கும்பலிடமிருந்து மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாமல், 'இரட்டை இலை' சின்னத்தையும் நிரந்தரமாகப் பெற்று, 2019 மக்களவைத் தேர்தல் தோல்வி', '2019 கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் தோல்வி', "2021 சட்டமன்றத் தேர்தல் தோல்வி”, “2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தோல்வி' என தொடர் தோல்விகளை சந்தித்து வரும் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அடுத்தவர்களை அழித்தால்தான் செம்மை பெற முடியும் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களுக்கு தக்கப் பாடம் புகட்டி, கழகத்தினர் அனைவரும் செம்மை பெற வழிவகுக்கப்படும்" என்று ஓ. பன்னீர்செல்வம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.