திடீர் ட்விஸ்ட்.. எதிர் கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிக்க ஆம் ஆத்மி முடிவு..!!
Aap decides to ignore opposition parties meeting
பீகார் மாநிலம் பாட்னாவில் நாளை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளும் எதிர்க்கட்சிகளின் அடிப்படையில் பாஜகவுக்கு எதிராக 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முப்தி மோச்சா ஆகிய முக்கிய எதிர் கட்சிகள் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன.
இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியும் கலந்து கொள்ளும் என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். ஆனால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பல்வேறு நிபந்தனைகளை அரவிந்த் கெஜ்ரிவால் விதித்திருந்தார்.
ஆம் ஆத்மி கட்சி இந்த கூட்டணியில் இணைவது குறித்து காங்கிரஸ் தனது முடிவை தெரிவிக்க வேண்டும், மாநில கட்சிகள் வலுவாக உள்ள தொகுதிகளை காங்கிரஸ் கட்சி விட்டுக் கொடுக்க வேண்டும், பிற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளுக்கு உதவ வேண்டும் என நிபந்தனைகளை விதித்திருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மியின் எந்த நிபந்தனைக்கும் பதில் அளிக்காமல் மௌனம் காத்தது.
இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள நிதிஷ்குமாரும் நிபந்தனைகளுக்கு பதில் அளிக்காமல் இருந்தார். மேலும் டெல்லிய அரசில் அதிகாரிகளை நியமனம் செய்வது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஆதரவை அரவிந்த் கெஜ்ரிவால் கோரியிருந்தார்.
மேலும் பாட்னாவில் நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் அவசர சட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனவும், காங்கிரஸ் கட்சியை தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை அறிவிக்காததால் ஆம் ஆத்மி கட்சி பாட்னாவில் நடைபெறும் எதிர்கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று பகுஜன் சமாஜ்வாதி கட்சி எதிர்க்கட்சிகளின் கைகள் மட்டுமே இணைந்துள்ளது, இதயங்கள் இணையவில்லை. எனவே அவர்களுடன் கூட்டணி சேர நாங்கள் விரும்பவில்லை என மாயாவதி அறிவித்துள்ளார்.
அதே போன்று ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்துள்ளார். இதுபோன்று சுமார் 7 எதிர்க் கட்சிகள் பாட்னா கூட்டத்தை புறக்கணித்துள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் இடையே ஏற்பட்டுள்ள இந்த குழப்பம் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
Aap decides to ignore opposition parties meeting