கோட்டை விட்டார், குடிகாரர் ஆக்கிவிட்டார்! நாளை தமிழக பாஜகவின் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் - அண்ணாமலை அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "

திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. ஊழல் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் நடைபெற்றிருக்கிறது. சாமானிய மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் தமிழகம் தாழ்ந்திருக்கிறது. படுகொலைகள் நடக்காத நாளே இல்லை. பாலியல் குற்றங்கள் நிகழாத நகரமே இல்லை. ஆனால் இவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தினந்தோறும் விளம்பர ஷூட்டிங் நடத்தி நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தையும், எதிர்ப்பையும் மடைமாற்ற, பிற மாநிலங்களில் உள்ள இந்தி கூட்டணிக் கட்சியினரையும் துணை சேர்த்து நாளை ஒரு மெகா நாடகம் அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின். தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், ஒரு கற்பனையான பயத்தினை உருவாக்க முயற்சி செய்கிறார்.

இதற்கு முன்பாக, நீட் எதிர்ப்பு என்ற பெயரில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். யாரும் மதிக்கவில்லை. இப்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஆள் அனுப்பி கெஞ்சிக் கூத்தாடி நாளைய நாடகத்தில் பங்கேற்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து காவிரியில் தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டுள்ளது. டெல்டாவில் பயிர்கள் தண்ணீர் இன்றி வாடிப் போயின. ஆனால் கர்நாடக அரசிடம் காவிரி நீரைத் திறந்து விடச் சொல்ல, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாய் வரவில்லை. தமிழக விவசாயிகளை விட, அவரது இந்தி கூட்டணிதான் முக்கியமாக இருக்கிறது. அவருக்கு மேகதாது அணை தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு தெளிவுபடுத்திய பின்னரும் மேகதாது அணையைக் கட்ட தமிழகத்தின் சம்மதம் தேவையில்லை. அணையைக் கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக மாநிலத் துணை முதலமைச்சர் D.K சிவக்குமார் அவர்களுக்குத் தான் வாழிய பாடி வரவேற்கிறது திமுக.

முல்லை பெரியாறு அணையில் ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு. பேபி அணையைப் பழுது பார்க்கக் கூட தமிழக வல்லுநர்களை அனுமதிப்பதில்லை.

தென்காசி மக்களுக்குப் பயன்படும் செண்பகவல்லி அணையிலும் தொடர்ந்து பிரச்சினை மட்டுமே செய்து வருகிறது கேரள மாநிலம். இது தவிர, தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி என எல்லை மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அனைத்தும் கேரள மாநிலத்துக்குக் கடத்தப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 5 முறை கேரள மாநிலத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், சாதித்தது என்ன?

அரிசி பருப்பு, காய்கறிகள் என தமிழகத்தில் இருந்து அனைத்தையும் பெற்றுவிட்டு, பதிலுக்கு கேரள மாநிலம் நமக்குத் தருவது மருத்துவக் கழிவுகளும் இறைச்சிக் கழிவுகளும் தான். கேரள அரசு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவக் கழிவுகளைக் கூட நமது எல்லை மாவட்டங்களில் வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது கேரள அரசு. இரண்டு நாட்களுக்கு முன்பாக, அங்குள்ள தெரு நாய்களைக் கொண்டு வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டுச் சென்றார்கள். இவை அனைத்தும் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்குத் தெரியாமலா நடக்கிறது? இப்படி தமிழகத்தை ஒரு குப்பைக் கிடங்காகப் பார்க்கும் கேரள முதலமைச்சருக்குத் தான் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தொடர்ந்து தமிழக மக்களுக்கும் தமிழகத்துக்கும் எதிராகச் செயல்படுபவர்களை வைத்து தனது அரசியல் இருப்பைக் காட்டிக் கொள்ளத் துடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. தொடர்ந்து தனது இந்தி கூட்டணிக் கட்சியினருக்காக, தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து, நாளை தமிழக பாஜக சார்பில், கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்.

தமிழக பாஜக சகோதர சகோதரிகள் அனைவரும் நாளை (22.03.2025) காலை 10 மணிக்கு, அவரவர் வீட்டு முன்பாக நின்று தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக, கேரள மாநிலத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin Protest announce


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->