இப்படி சாதிக்குள் அடைத்து கேவலப்படுத்துவது அவமானம் இல்லையா? CM ஸ்டாலினுக்கு பாஜக கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal



பிரதமரின் விஸ்வகர்மா திட்டமானது ஜாதி அடிப்படையில் உள்ளது என்ற பொருள்பட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை ஆய்வு செய்திட தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டதாகவும் அக்குழு விரிவான ஆய்வினை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை பரிந்துரைத்ததாகவும், ஆனால் இத்திட்டத்தில் மத்திய அரசு மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை என்றும் முதலமைச்சர் கூறியுள்ளது அந்த குழுவின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. 

மேலும் தமிழக அரசே தமிழகத்தில் உள்ள கைவினைஞர்களுக்கு விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட முடிவு செய்துள்ளதாகவும் அரசுக் குறிப்பு தெரிவித்துள்ளது.

விஸ்வகர்மா என்றால் ஜாதியா? விஸ்வகர்மா என்றால் படைக்கும் கடவுள். துவாரகை நகரம், இந்திரப்பிரஸ்தம், இலங்கை போன்ற நகரங்களை படைத்தது விஸ்வகர்மா. படைக்கும் தொழிலாளிகளுக்கு கடவுளாக வணங்கப்படுகிற, வழிபடுகின்ற விஸ்வகர்மாவை ஒரு ஜாதிக்குள் அடைத்து, அது குலத்தொழில் என்று சொல்லி கேவலப்படுத்துவது அவமானம் அல்லவா? காலங் காலமாக அன்றாட வாழ்க்கையில் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா? 

தையற்கலைஞர்கள், பொற்கொல்லர்கள், செருப்பு தைப்பவர்கள், தச்சு வேலை செய்பவர்கள், படகு செய்பவர்கள், என பல்வேறு பதினெட்டு வகையான தொழில்களில் காலங் காலமாக ஈடுபட்டு வருபவர்களுக்கு இந்த மத்திய அரசின் திட்டத்தில் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 30 லட்சம் குடும்பங்களுக்கு, ஐந்து வருடங்களுக்கு மத்திய அரசால் 13,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தொழில்நுட்ப மாறுதல்களுக்கு ஏற்ப காலங்காலமாக கைவினை தொழிலில் ஈடுபட்டு  வருபவர்களால் தங்களை தொழில்நுட்ப ரீதியாக மாற்றிக் கொள்ள முடியாத காரணத்தால், அவர்களை ஊக்குவிக்க, உதவி செய்யவே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக மயமாக்கலின் வேகத்தை, உள்ளூர் சந்தையின் போட்டியை சமாளிக்க ஒருங்கிணைக்கவே இந்த திட்டம் என்பதை பலமுறை எடுத்து சொல்லியும் இந்த திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

ஆனால், உப்பு சப்பில்லாத மூன்று காரணங்களை குறிப்பிட்டு அதை பரிந்துரைகளாக தமிழக அரசின் சார்பாக சொல்லி, இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று முதலமைச்சர் கூறியிருப்பது, பணம் படைத்த பல முதலாளிகளுக்கு சாதகமாக அமையும் என்பதையும், பெரு நிறுவனங்களுக்கே மேலும் மேலும் இந்த தொழில்களின் வருவாய் சென்று சேரும் என்பதையும், சிறு குறு தொழிலாளிகள் பெரு முதலாளிகளை, பெரு நிறுவனங்களை சார்ந்தே இருக்க முடியும் என்பதை முதலமைச்சர் கவனிக்க தவறி விட்டார் என்பதை உறுதி செய்கிறது. 

மேலும், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பயனாளிகளை அடையாளம் காணக்கூடாது என்றும், கிராம நிர்வாக அலுவலர்களே அடையாளம் காண வேண்டும் என்பதும் அரசியல் ரீதியாக தங்களின் கட்சியை சார்ந்தவர்களுக்கே இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் செய்யப்பட்ட பரிந்துரை என்பதை உணர்த்துகிறது.

உடனடியாக மத்திய அரசின் விஸ்வ கர்மா திட்டத்தை இன்றைய அறிக்கையை திரும்பப் பெற்று, தமிழகத்தில் அமல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவன செய்வதன் மூலம் மட்டுமே,  பெரு நிறுவனங்களின், பெரு முதலாளிகளின் ஆதிக்கத்தை அகற்றி, காலங் காலமாக உழைத்து வரும்  கைவினைஞர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற முடியும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan Condemn to DMK MK Stalin Govt PM Vishvakarma scheme


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->